ADDED : அக் 08, 2025 12:18 AM
சண்டிகர்:'கோல்ட்ரிப்' இருமல் மருந்தை அருந்திய, 14 குழந்தைகள் மத்திய பிரதேச மாநிலத்தில் பலியானதை அடுத்து, அந்த மாநிலத்தில் அந்த மருந்து தடை செய்யப்பட்டுள்ளது. அதுபோல, பஞ்சாபிலும் அந்த இருமல் மருந்து தடை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசான் பார்மசூட்டிகல் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் இருமல் மருந்தை அருந்திய, 14 குழந்தைகள், மத்திய பிரதேச மாநிலத்தில் இறந்தன.
அதையடுத்து, அந்த மருந்தை ஆய்வுக்கு உட்படுத்திய மத்திய பிரதேச மாநில உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள், அந்த இருமல் மருந்து தரம் குறைவானது என்பதை கண்டறிந்துள்ளனர்.
அதையடுத்து, 'எஸ்.ஆர்., 13' என்ற அந்த பேட்ச்சில் வெளிவந்த கோல்ட்ரிப் இருமல் மருந்துகளை தடை செய்துள்ள, ம.பி., அரசு, அந்த மருந்து பயன்பாட்டை வாங்க, விற்க அனைத்து தரப்பினருக்கும் தடை விதித்துள்ளது .
இதையடுத்து, அந்த இருமல் மருந்துக்கு, பஞ்சாப் மாநில அரசும் தடை விதித்துள்ளது. அது போல, கேரளா மற்றும் கர்நாடகா மாநில அரசுகளும், கோல்ட்ரிப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு பரிந்துரை செய்யக் கூடாது என டாக்டர் களுக்கு உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு பதவியில் உள்ளது.