வழக்கறிஞர் ராகேஷ் மீது நடவடிக்கை எடுக்க கோரி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
வழக்கறிஞர் ராகேஷ் மீது நடவடிக்கை எடுக்க கோரி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 08, 2025 12:17 AM
புதுடில்லி:தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது, காலணியை வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அகில இந்திய வழக்கறிஞர் சங்கம், உச்ச நீதிமன்ற வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுடில்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம் கஜூராஹோ ஜாவேரி கோவில் யுனெஸ்கோ அமைப்பால் புராதன சின்னமாக பாதுகாக்கப்படுகிறது.
கேலி இந்தக் கோவிலில் உள்ள ஏழு அடி உயர விஷ்ணு சிலையை, சமூக விரோதிகள் சேதப்படுத்தி விட்டனர். அந்தச் சிலையை சீரமைக்க உத்தரவிட வேண்டும் என, கோரிக்கை விடுத்து இருந்தார்.
அந்த மனு, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
மனுவை ஆய்வு செய்த நீதிபதி, இந்தக் கோரிக்கையை தொல்லியல் துறையிடம் தெரிவிக்க வேண்டும். இதற்கெல்லா நீதிமன்ற நேரத்தை வீணடிக்கக் கூடாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
இதனால், ஆத்திரம் அடைந்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், தன் காலணியை கழற்றி, தலைமை நீதிபதி மீது வீச முயன்றார். பாதுகாவலர்கள் தடுத்து கிஷோரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்தச் சம்பவம் நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், வழக்கறிஞர்கள் ராகேஷ் கிஷோர் மீது வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், உச்ச நீதிமன்ற வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.
சங்க வழக்கறிஞர் சுனில் குமார், “உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன் தினம் நடந்த இந்தச் சம்பவம் அரசியலமைப்பு மற்றும் நீதித்துறைக்கு எதிரான தாக்குதல். வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
''ராகேஷ் குமார் வழக்கறிஞர் தொழில் செய்ய வாழ்நாள் முழுதும் தடை விதிக்க வேண்டும். இதுபோன்ற சம்பவம் நாட்டின் வேறு எந்த நீதிமன்றத்திலும் இனி நடக்கக்கூடாது என்பதற்கான முன்னுதாரணமாக அவர் மீதான நடவடிக்கை இருக்க வேண்டும்,'' என்றார்.
அதேநேரத்தில், வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் நிருபர்களிடம் கூறியதாவது: என் செயலுக்கு நான் கொஞ்சமும் வருத்தப்படவில்லை.
கஜுராஹோ கோவிலில் விஷ்ணு சிலை சீரமைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த தலைமை நீதிபதி ஹிந்து மதத்தை கேலி செய்யும்படியான கருத்துக்களை தெரிவித்ததால், என் மனது புண்பட்டது.
விஷ்ணுவிடமே பிரார்த்தனை செய்யுங்கள் என்றார். இது, தலைமை நீதிபதியின் பதவிக்கு அழகா? மனுவை ஏற்பதும் தள்ளுபடி செய்வதும் அவர் விருப்பம். ஆனால், மனுதாரரை கேலி செய்ய அதிகாரம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான விகாஸ் சிங், “தன்னை பிரபலப்படுத்திக் கொள்ளவே ராகேஷ் கிஷோர் இந்தச் செயலை செய்துள்ளார். எனவே, ஊடகங்களும், சமூக ஊடகங்களிலும் அவருக்கு யாரும் விளம்பரம் தேடிக்கொடுக்க வேண்டாம்,” என்றார்.
ஆம் ஆத்மி ஆம் ஆத்மி கட்சியின் டில்லி தலைவர் சவுரவ் பரத்வாஜ் மற்றும் எம்.எல்.ஏ., குல்தீப் குமார் ஆகியோர் தலைமையில் அக்கட்சியினர் அம்பேத்கர் படம் ஏந்தியபடி கிழக்கு டில்லி மயூர் விஹாரில் நேற்று ஊர்வமலாக சென்றனர்.
அப்போது, தலைமை நீதிபதியை அவமதித்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.