திறமையான மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி டில்லி அரசு புது திட்டம்
திறமையான மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி டில்லி அரசு புது திட்டம்
ADDED : செப் 20, 2024 08:15 PM
புதுடில்லி:டில்லி அரசுப் பள்ளிகளில் ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 6,000 பேரில், திறமையான மாணவர்களைக் கண்டறிய உளவியல் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, டில்லி அரசின் கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
டில்லி அரசுப் பள்ளிகளில் 6 மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 6,000 மாணவ - மாணவியரில் திறமையானவர்களை கண்டறிய 'அபிஷிக்த்' என்ற திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் முதல் சுற்று உளவியல் பரிசோதனை மற்றும் நுண்ணறிவு தேர்வு ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு வரும் 28ம் தேதி நடத்தப்பட்டுகிறது.
நுண்ணறிவுத் தேர்வில் 80 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவ - மாணவியர் இரண்டாவது சுற்று பரிசோதனைக்கு செல்வர். மேலும், தேர்வில் மிகச்சிறப்பாக தேர்ச்சி பெறும் மாணவர்கள் டில்லியின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 15 பள்ளிகளுக்கு மாற்றப்படுவர். அங்கு அவர்களுக்கு சிறப்பு தத்துவார்த்த மற்றும் நடைமுறைக் கல்வி கற்பிக்கப்படும்.
அதேபோல இந்த மாணவர்களுக்கு ஆங்கிலம், ஹிந்தி, கணிதம், இயற்கை அறிவியல், உள்நாட்டு அறிவியல், சமூக ஆய்வு, கணினி அறிவியல், உடற்கல்வி, சமஸ்கிருதம் மற்றும் நுண்கலை உள்ளிட்ட பல்வேறு பாடங்கள் என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டத்தின் அடிப்படையில் கற்பிக்கப்படும்.
டில்லி அரசுப் பள்ளிகளில் படிக்கும் சிறப்புத் திறமை கொண்ட குழந்தைகளை அடையாளம் காணவும், சிறப்புப் பாடத்திட்டத்தின் வாயிலாக அவர்களின் திறனை மேம்படுத்தவும் இந்த திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
இந்த மாணவர்கள் அறிவியல் பரிசோதனைகள், அருங்காட்சியக ஆய்வுகள், கல்விச் சுற்றுலா மற்றும் கிராமங்களில் தங்கி கற்றல் ஆகிய வசதிகளையும் பெறுவர். எழுதும் திறனை மேம்படுத்த, பயணங்கள் தொடர்பாக கட்டுரை எழுத வைக்கப்படுவர்.
தகவல் தொடர்பு, வாழ்க்கை வெளிப்பாடு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்த இந்தத் திட்டம் உதவும்.
அதேபோல உள்ளூர் சந்தைகள் மற்றும் அருகிலுள்ள இடங்களுக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுவர். காய்கறிகள் மற்றும் பழங்கள் வாங்குதல் போன்ற செயல்களை செய்ய வைக்கப்படுவர். குடும்பத்தை விட்டு வெளிநபர்களுடன் தொடர்பு கொள்வதை ஊக்குவித்தலுக்காக இதுபோன்ற பணிகள் வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்துக்காக ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கான மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
மற்ற மாணவர்களை விட திறமையான மாணவர்களின் பயன்படுத்தப்படாத திறனை ஆராய்வதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.