குற்றத் தலைநகராகி விட்டது டில்லி அமித்ஷாவுக்கு கெஜ்ரிவால் கடிதம்
குற்றத் தலைநகராகி விட்டது டில்லி அமித்ஷாவுக்கு கெஜ்ரிவால் கடிதம்
ADDED : டிச 14, 2024 09:40 PM
புதுடில்லி:“நாட்டின் தலைநகரான டில்லி, குற்றங்களின் தலைநகராக மாறி விட்டது. இதுகுறித்து விவாதிக்க வேண்டும்,”என, ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அனுப்பியுள்ள கடிதம்:
பள்ளிகள் மற்றும் சர்வதேச விமான நிலையத்துக்கு சமீபத்தில் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. மத்திய உள்துறை அமைச்சரான உங்கள் கண்காணிப்பின் கீழ் தேசிய தலைநகரான டில்லி மாநகரப் போலீஸ் செயல்படுகிறது. ஆனால், டில்லி மாநகரில் சட்டம்- - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. ரவுடிகள் சகஜமாக நடமாடுகின்றனர். துப்பாக்கிச் சூடு, பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை மற்றும் போதைப்பொருள் விற்பனை என குற்றங்களின் தலைநகராக, தேசிய தலைநகர் டில்லி மாறி விட்டது.
டில்லியில் சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதேபோல, தொழிலதிபர்களை மிரட்டி ரவுடிகள் பணம் பறிக்கும் செயல்களும் நாள் தவறாமல் நடக்கின்றன. போதைப்பொருள் மாபியா நகரம் முழுதும் பரவியுள்ளது. மொபைல் போன் மற்றும் நகை பறிப்பு சம்பவங்கள் அன்றாட சம்பவங்களில் ஒன்றாகி விட்டது.
கடந்த 6 மாதங்களில், 600க்கும் மேற்பட்ட பள்ளிகள், 100க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. ஆனால், குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த மிரட்டலால் மாணவ - மாணவியர் மட்டுமின்றி பெற்றோரும் பெரும் பீதி அடைந்துள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சகத்தை நிர்வகிக்கும் நீங்கள், அரசியலுக்கு அப்பாற்பட்டு தலைநகரில் சட்டம் - ஒழுங்கை சீர்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பிரச்னை குறித்து, உங்களிடம் நேரில் விவாதிக்க தயாராக இருக்கிறேன்.
நாட்டின் 19 பெருநகரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் கொலை சம்பவங்களில் டில்லிதான் முதலிடம் வகிக்கிறது.
கடந்த 2019ம் ஆண்டிலிருந்து போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது. சராசரியாக தினமும் மூன்று பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.