மருத்துவமனைக்கு நிபுணர் குழு டில்லி சுகாதார அமைச்சர் வரவேற்பு
மருத்துவமனைக்கு நிபுணர் குழு டில்லி சுகாதார அமைச்சர் வரவேற்பு
ADDED : பிப் 14, 2024 09:49 PM
புதுடில்லி:அரசு மருத்துவமனைகளில் ஆய்வு செய்ய டில்லி உயர் நீதிமன்றம் நிபுணர் குழு அமைக்க உத்தரவிட்டதை டில்லி அரசு வரவேற்றுள்ளது.
டில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
அரசின் மற்ற துறைகளை விட, சுகாதாரத்துறை மனிதவளம் அதிகம் கொண்ட துறை. தேவையான மனிதவளத்தை ஏற்படுத்தாமல் உள்கட்டமைப்பை உருவாக்கி எந்தப் பயனும் இல்லை.
டில்லியில் உள்ள மத்திய, மாநில மற்றும் மாநகராட்சி மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு மற்றும் பணியாளர் பற்றாக்குறை குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறேன்.
நிபுணர் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படுவதை உயர் நீதிமன்றம் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு சிறந்த சுகாதார வசதிகள் கிடைக்கும்.
குறிப்பாக ஏழைகள் பயன்பெறுவர். டில்லி மக்களின் சுகாதாரத் தேவைகளைப் பாதுகாக்க நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தைச் செலவிட்டதற்காக நீதிபதிகளுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பொதுநல வழக்கு ஒன்றை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், 'அரசு மருத்துவமனைகளில் இயந்திரங்கள், மருந்துகள் மற்றும் பணியாளர்கள் போதுமான அளவில் இல்லை. மருத்துவ மனைகளில் உள்கட்டமைப்பு மற்றும் பணியாளர் பற்றாக்குறை ஆகியவை குறித்து ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்படும்' என, உத்தரவிட்டது.

