மீண்டும் டில்லிக்கு விமானம் ஏறிய சிவகுமார்; போகட்டும் என்ற முதல்வர் சித்தராமையா
மீண்டும் டில்லிக்கு விமானம் ஏறிய சிவகுமார்; போகட்டும் என்ற முதல்வர் சித்தராமையா
ADDED : டிச 03, 2025 08:39 PM

பெங்களூரு: திருமண விழாவுக்காக டில்லி செல்வதாகவும், நாளைய தினம் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்வேன் என்றும் கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் கூறி உள்ளார்.
கர்நாடகாவில் முதல்வர் பதவி கேட்டு போர்க்கொடி தூக்கிய சிவகுமாருக்கும், சித்தராமையாவுக்கும் இடையேயான முரண்பாடு தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இந்த விவகாரத்தை காங்கிரஸ் டில்லி தலைமை தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளது.. இந் நிலையில், துணை முதல்வர் சிவகுமார் டில்லி சென்றுள்ளார். பெங்களூருவில் நிருபர்களிடம் பேசிய அவர், நாளை காலை அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கும் வகையில் திரும்பி விடுவேன் என்றார். சிவகுமார் மேலும் கூறியதாவது;
திருமண விழாவிற்காக டில்லி செல்கிறேன். டிசம்பர் 14ம் தேதி நாங்கள் ராம்லீலா மைதானத்திற்குச் செல்கிறோம், அங்கு ஒரு பெரிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவிலிருந்து, டில்லி செல்ல குறைந்தது 300 பேர் தேவை. அனைத்து மாவட்ட தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்களும் ஓட்டுரிமை நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். ஏற்பாடுகளைப் பார்க்க நான் அங்கு செல்கிறேன்.
நாளை (டிச.4) காலை அமைச்சரவைக் கூட்டத்திற்குத் திரும்புவேன். நான் திருமணத்திலும் 2-3 சிறிய கூட்டங்களிலும் கலந்து கொள்வேன், திரும்பி வருவேன்.
என் கையில் உள்ள கடிகாரம் நான் ஆஸ்திரேலியாவில் இருந்து வாங்கியது. எனது சொந்த கடிகாரம் . 7 ஆண்டுகளுக்கு முன்பே, என் கிரெடிட் கார்டிலிருந்து ரூ.24 லட்சம் செலுத்தினேன், அதை நீங்கள் சரி பார்த்துக் கொள்ளலாம்.
என்னுடைய தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் நான் ஒரு விலையுயர்ந்த கடிகாரத்தை வைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளேன். என் தந்தைக்கு 7 கடிகாரங்கள் இருந்தன, அவர் இறந்த பிறகு, அவை என் சகோதரனுக்கும் எனக்கும் சொந்தமானது.
இவ்வாறு சிவகுமார் பேட்டி அளித்தார்.
அவரின் டில்லி பயணம் குறித்து முதல்வர் சித்தராமையா கூறியதாவது;
அவர் போகட்டும். எனக்கு போன் வந்தால்தான் நான் போவேன். இதுவரை எனக்கு போன் வரவில்லை என்றார்.

