UPDATED : செப் 13, 2024 11:40 PM
ADDED : செப் 13, 2024 11:36 PM

புதுடில்லி : டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் நேற்று ஜாமின் வழங்கியது. ஆனால், முதல்வர் அலுவலகம் செல்லவும், கோப்புகளில் கையெழுத்து போடவும் அவருக்கு தடை விதித்துள்ளது.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கெஜ்ரிவால் மீது வழக்குப் பதிவு செய்த அமலாக்கத்துறை, மார்ச் 21ல் கைது செய்தது. லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக மே 10ல், கோர்ட் அவருக்கு இடைக்கால ஜாமின் அளித்தது. தேர்தல் முடிந்ததும், ஜூன் 2ல் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
அமலாக்கத்துறை வழக்கில், ஜூலை 12ல் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைத்தது. ஆனால், ஜூன் 26ல் இதே வழக்கில் சி.பி.ஐ.,யால் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதனால், ஜாமின் கிடைத்தும் சிறைவாசம் தொடர்ந்தது.
சி.பி.ஐ., கைது செய்தது செல்லாது என்றும், ஜாமின் கேட்டும் கோர்ட்டை நாடினார். நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜய் புயான் விசாரித்தனர்; நேற்று தீர்ப்பு வழங்கினர்.
பத்து லட்சம் ரூபாய் சொந்த ஜாமின் மற்றும் அதே மதிப்பில் இரு நபர் ஜாமினில் முதல்வரை விடுவிக்க உத்தரவிட்டனர். ஆனால், முதல்வரின் அலுவலகம் செல்லக் கூடாது; கோப்புகளில் கையெழுத்து போடக் கூடாது என நிபந்தனை விதித்தனர்.
'இந்த வழக்கு குறித்து பேசக்கூடாது; விசாரணை கோர்ட்டில் தவறாமல் ஆஜராக வேண்டும்' என உத்தரவிட்டனர். மே மாதம் அவருக்கு அமலாக்கத்துறை வழக்கில் ஜாமின் வழங்கிய போது விதித்த நிபந்தனைகள் இந்த வழக்கிலும் பொருந்தும் என்றனர்.
நீதிபதி சூர்யகாந்த் உத்தரவில், 'ஒரு வழக்கில் சிறையில் உள்ளவரை வேறு வழக்கில் மீண்டும் கைது செய்ய தடை ஏதும் இல்லை. இந்த கைதுக்கான தேவை குறித்து சி.பி.ஐ., விளக்கம் அளித்துள்ளது. பிரிவு 41(ஏ)(3) மீறப்படவில்லை. எனவே இந்த கைது சட்டபூர்வமாக செல்லும்' என குறிப்பிட்டு உள்ளார்.
நீதிபதி உஜ்ஜல் புயான், சி.பி.ஐ.,யின் செயலை கண்டித்தார். அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைக்கப்போகும் நேரத்தில் சி.பி.ஐ., அவரை கைது செய்ய அவசரம் காட்டியுள்ளது.
அதற்கு முன் 22 மாதங்களாக ஏற்படாத அவசியமும், அவசரமும் அப்போது ஏன் ஏற்பட்டது? அவர் ஜாமினில் வெளியே வருவதை தடுக்கவே, சி.பி.ஐ., அவரை கைது செய்ததாக தோன்றுகிறது. இந்த கோர்ட் ஜாமின் அளித்த பிறகும் அவரை சிறையில் வைத்திருந்தது, நீதித்துறையை கேலிக்குஉள்ளாக்கும் செயல்.
விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்பதை காரணம் காட்டி ஒருவரை சிறையில் வைத்திருப்பதை சி.பி.ஐ., நியாயப்படுத்த முடியாது.
சி.பி.ஐ., கூண்டில் அடைபட்ட கிளி என்ற கருத்தை மாற்றி, அது கூண்டில் அடைபடாத பறவை என காட்ட வேண்டும்.இவ்வாறு கூறிய நீதிபதி புயான், அலுவலகம் செல்லவும் கோப்புகளில் கையெழுத்து போடவும் கெஜ்ரிவாலுக்கு விதிக்கப்பட்ட தடை மீது தனக்கு உடன்பாடு இல்லை என்றார்.தீர்ப்பை தொடர்ந்து, திஹார் சிறையில் இருந்து கெஜ்ரிவால் நேற்று மாலை விடுவிக்கப்பட்டார். சிறை வாசலில் அவருக்கு ஆம் ஆத்மி கட்சியினர் ஆரவார வரவேற்பு அளித்தனர்.
அவர்களிடம் கெஜ்ரிவால் பேசுகையில், ''வாழ்க்கையில் எனக்கு பல இடையூறுகள் வந்துள்ளன. ஆனாலும், கடவுளின் ஆசியுடன் அவற்றை முறியடித்துள்ளேன். சிறை கம்பிகளும், சுவரும் என் மன உறுதியை அதிகரித்துள்ளன. என் ரத்தத்தின் ஒவ்வொரு துளியையும் நாட்டுக்காக அர்ப்பணிப்பேன்,'' என்றார்.
இது வெறும் ஜாமின் உத்தரவு மட்டுமல்ல. பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு தங்கள் சர்வாதிகார போக்கை நிறுத்த வேண்டும் என்ற பெரிய செய்தியை சுப்ரீம் கோர்ட் கோடிட்டு காட்டியுள்ளது.மணீஷ் சிசோடியா டில்லி முன்னாள் துணை முதல்வர், ஆம் ஆத்மி
கெஜ்ரிவால் மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் ரத்து செய்யவில்லை; நிபந்தனை ஜாமின் தான் வழங்கப்பட்டுள்ளது. எனவே, முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும்.
கவுரவ் பாட்டியாதேசிய செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,
மோடி, அமித் ஷாவுக்கு பிடிக்காத பலர், விசாரணையே நடத்தாமல் பல ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இது குறித்து கோர்ட் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக விசாரணை அமைப்புகளை, பா.ஜ., அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது.
சுப்ரியா ஸ்ரீநாத் செய்தி தொடர்பாளர், காங்கிரஸ்