டில்லி மெட்ரோ ரயில் கட்டணம் 8 ஆண்டுகளுக்கு பின் உயர்வு
டில்லி மெட்ரோ ரயில் கட்டணம் 8 ஆண்டுகளுக்கு பின் உயர்வு
ADDED : ஆக 26, 2025 01:15 AM
புதுடில்லி: நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் டில்லி மெட்ரோ ரயில் நிறுவனம், 8 ஆண்டுகளுக்கு பின் கட்டணங்களை உயர்த்தியுள்ளது.
கொரோனா தொற்று இழப்புகள், கடனை திருப்பி செலுத்துதல் மற்றும் பராமரிப்பு செலவுகள் காரணமாக, கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருந்த டில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் 8 ஆண்டுகளுக்கு பின், பயணியருக்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளது. பயண துாரத்தைப் பொறுத்து, இக்கட்டணம் 1 முதல் 4 ரூபாய் வரை இருக்கும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய கட்டணத்தின்படி, 2 கி.மீ., வரையிலான பயணங்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாயில் இருந்து 11 ரூபாயாகவும், 32 கி.மீ.,க்கு மேல் உள்ள பயணங்களுக்கு அதிகபட்ச கட்டணம் 60 லிருந்து 64 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இதேபோன்று, 12 முதல் 21 கி.மீ.,க்கு கட்டணம் 40லிருந்து 43 ரூபாயாகவும், 21 முதல் 32 கி.மீ., பயணத்திற்கு கட்டணம் 50 லிருந்து 54 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டணங்கள் ஞாயிற்று கிழமைகளிலும், தேசிய விடுமுறை நாட்களிலும் பொருந்தும் என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நாட்களில் 32 கி.மீ.,க்கு மேல் உள்ள பயணங்களுக்கான கட்டணம் 50க்கு பதிலாக 54 ரூபாயாக உயருகிறது. அதேவேளையில், 12 முதல் 21 கி.மீ., வரையிலான பயணத்திற்கு 30ல் இருந்து 32 ரூபாயாக திருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 ரூபாய் வரையிலான கட்டண உயர்வுடன் விமான நிலைய எக்ஸ்பிரஸ் பாதையிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்தும் பயணியருக்கு ஒவ்வொரு பயணத்திலும் 10 சதவீத கட்டண சலுகை தொடர்ந்து வழங்கப்படும். மேலும், காலை 8:00 மணிக்கு முன், மதியம் 12:00 முதல் மாலை 5:00 மணி வரை மற்றும் இரவு 9:00 மணிக்கு பிந்தைய நெரிசல் இல்லாத நேரங்களில் கூடுதலாக 10 சதவீத தள்ளுபடி கிடைக்கும் என தெரிவித்துள்ளது.