டிராக்டர் மீது லாரி மோதி 9 பேர் பலி; 43 பேர் காயம்
டிராக்டர் மீது லாரி மோதி 9 பேர் பலி; 43 பேர் காயம்
ADDED : ஆக 26, 2025 01:13 AM
லக்னோ: உத்தர பிரதேசத்தில், பக்தர்கள் சென்ற டிராக்டர் மீது லாரி மோதியதில், சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர்; 43 பேர் காயம் அடைந்தனர்.
உ.பி.,யின் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ரபத்பூர் கிராமத்திலிருந்து, ராஜஸ்தானின் ஜஹர்பீருக்கு புனித யாத்திரைக்காக, 61 பேர் டிராக்டரில் சென்று கொண்டிருந்தனர்.
நேற்று அதிகாலை 2:10 மணியளவில், புலந்த்ஷஹர் மாவட்டத்தில் ஆர்னியா பைபாஸ் அருகே புலந்த்ஷஹர்- - அலிகார் எல்லையில் சென்றபோது, டிராக்டர் மீது பின்னால் வந்த லாரி மோதியது. இதில் டிராக்டர் கவிழ்ந்தது.
இந்த விபத்தில், இரண்டு சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர். 43 பேர் காயமடைந்தனர். காயம்அடைந்த 43 பேரில் 12 பேர் குழந்தைகள்.
பயணியரை ஏற்றிச் செல்ல டிராக்டரை பயன்படுத்துவது உத்தர பிரதேசத்தில் அதிகாரப்பூர்வமாக தடைசெய்யப்பட்டு உள்ளது.
ஆனால் அதையும் மீறி, இரண்டு தளங்களாக மாற்றியமைக்கப் பட்டு டிராக்டரை பயணத்திற்கு பயன்படுத்தியுள்ளனர்.
பக்தர்கள் மறைவுக்கு உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் நிவாரணமும் அவர் அறிவித்தார்.