வங்காள மொழிக்கு அவமதிப்பு டில்லி போலீசுக்கு கண்டனம்
வங்காள மொழிக்கு அவமதிப்பு டில்லி போலீசுக்கு கண்டனம்
ADDED : ஆக 03, 2025 08:24 PM
புதுடில்லி:'நம் நாட்டின் அரசியலமைப்பு ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட வங்காள மொழி பேசும் மக்களை, 'வங்காள தேச மொழி' எனக்குறிப்பிட்டு, மேற்கு வங்க மாநில மக்களை டில்லி மாநகரப் போலீஸ் இழிவுபடுத்தியுள்ளது' என திரிணமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து, சமூக வலைதளத்தில், திரிணமுல் காங்கிரஸ் வெளியிட்டுள்ள பதிவு:
மேங்கு வங்க மாநிலத்தைக் குறிப்பிடும் போது, 'வங்காள தேச மொழி' என்ற வார்த்தையை டில்லி மாநகரப் போலீஸ் பயன்படுத்தியுள்ளது.
இதன் வாயிலாக, நம் நாட்டின் அரசியலமைப்பு ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட வங்காள மொழியை இழிவுபடுத்துவது மட்டுமின்றி, மில்லியன் கணக்கான வங்காள மொழி பேசும் இந்தியர்களை வெளிநாட்டினர் போல சித்தரிக்க டில்லி போலீஸ் முயற்சிக்கிறது.
பா.ஜ., ஆட்சி நடக்கும் மாநிலங்களில் வங்காள மொழி பேசும் மக்கலை துன்புறுத்தி தடுத்து வைத்த பிறகு, அமித் ஷா கட்டுப்பாட்டில் உள்ள டில்லி மாநகரப் போலீஸ், 'வங்காள தேச மொழி' என அதிகாரப்பூர்வமாக முத்திரை குத்துவதன் மூலம் அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டது.
இது ஒரு திட்டமிட்ட அவமானம். வங்காள மொழி சர்வதேச அளவில், 25 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பேசப்படுகிறது. இந்தியாவின், 22 அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயலுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு, உடனடி திருத்தம் மற்றும் அதற்குப் பொறுப்பான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், லோதி காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர், 'வங்காள தேச மொழி'க்கு மொழிபெயர்ப்பாளர் தேவை எனக் கோரி, புதுடில்லி பங்கா பவன் பொறுப்பாளருக்கு எழுதிய கடிதத்தையும் சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளது.
அந்தக் கடிதத்தில், செல்லுபடியாகும் பாஸ்போர்ட் மற்றும் விசா இல்லாமல் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காளதேச நாட்டினர் என சந்தேகிக்கப்படும் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடன் விசாரணை நடத்த வங்காள தேச மொழி பெயர்ப்பாளர்கள் தேவை. அவர்களிடம் கைப்பற்றிய ஆவணங்களில் வங்காள தேச மொழியில் உள்ள வாசகங்களை ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.