காற்று மாசுபாடு; அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு டில்லி அரசு கடும் எச்சரிக்கை
காற்று மாசுபாடு; அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு டில்லி அரசு கடும் எச்சரிக்கை
ADDED : டிச 17, 2025 12:02 PM

புதுடில்லி: கடுமையான காற்று மாசுபாடு நிலவி வரும் நிலையில், 50 சதவீத ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணி என்ற உத்தரவில் இருந்து தவறும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டில்லி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
டில்லியில் முதல்வர் ரேகா குப்தா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அங்கு கடந்த சில மாதங்களாக காற்றின் தரம் மிக மோசமான உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தும் அளவிலேயே உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த டில்லி அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குறிப்பாக, பள்ளி வேன்கள், பஸ்கள் இயங்குவதை தவிர்க்கும் விதமாக, பள்ளிகள், 'ஆன்லைன்' வாயிலாக இயங்கி வருகின்றன. உச்ச நீதிமன்றத்தில் கூட, மதியத்திற்கு மேல் வழக்கு விசாரணைகள் நடத்தப்படுவது இல்லை. வழக்கறிஞர்கள், 'ஆன்லைன்' வாயிலாகவே ஆஜராகின்றனர்.
மேலும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் 50 சதவீதம் பேருக்கு வீட்டில் இருந்து பணி செய்யுமாறு டில்லி அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மீறும் நிறுவனங்களுக்கு அகடும் அபராதம் விதிக்கப்படும் என்று டில்லி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேவேளையில், காற்று மாசுபாட்டை தவிர்ப்பதற்காக கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், பாதிக்கப்படும் பதிவு செய்யப்பட்ட கட்டுமான ஊழியர்களுக்கு தலா ரூ.10,000 நிவாரணம் வழங்க டில்லி அரசு முடிவு செய்துள்ளது.

