ஆப்பரேஷன் சிந்தூர் குறித்து சர்ச்சை பேச்சு; மன்னிப்பு கேட்க காங்கிரஸ் மூத்த தலைவர் மறுப்பு
ஆப்பரேஷன் சிந்தூர் குறித்து சர்ச்சை பேச்சு; மன்னிப்பு கேட்க காங்கிரஸ் மூத்த தலைவர் மறுப்பு
UPDATED : டிச 18, 2025 07:41 AM
ADDED : டிச 17, 2025 12:28 PM

புனே: ஆப்பரேஷன் சிந்தூர் குறித்து சர்ச்சை கருத்து கூறியது தொடர்பாக மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரித்விராஜ் சவுகான் மன்னிப்பு கேட்க மறுத்துள்ளார்.
புனேவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆப்பரேஷன் சிந்தூரின் முதல்நாளில் நம் இந்திய ராணுவம் முற்றிலுமாக தோல்வியடைந்து விட்டதாக கூறியிருந்தார். அவரது இந்தப் பேச்சுக்கு பாஜ கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்திய ராணுவத்தை அவமதிக்க யாருக்கும் உரிமை கிடையாது என்றும், நாட்டின் நலன்களை விட, இந்திய ராணுவத்தை அவமதிப்பதே காங்கிரசுக்கு பழக்கமாகி விட்டது என்று பாஜ மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜ உள்ளிட்ட ஆளும் கட்சியினர் வலியுறுத்தினர்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரித்விராஜ் சவுகான், இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
மேலும், அவர் கூறியதாவது; நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். கேள்வி கேட்க எனக்கு உரிமை இருக்கிறது. பஹல்காமில் நடந்த சம்பவம் குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும். ஆப்பரேஷன் சிந்தூர் தொடர்பான விபரங்களை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும். லோக் சபாவில் அறிமுகப்படுத்தப்பட்ட அணுசக்தி தனியார்மயமாக்கல் மசோதா மற்றும் ஷாந்தி மசோதா ஆகியவற்றில் இருந்து பொதுமக்களை திசைதிருப்பவே என்னுடைய கருத்துக்களை பெரிதுபடுத்துகின்றனர், என்றார்.

