வட மாநிலங்களில் நடுநடுங்க வைக்கும் குளிர்; டில்லியில் 5 டிகிரி செல்சியஸ்க்கு கீழே சரிவு
வட மாநிலங்களில் நடுநடுங்க வைக்கும் குளிர்; டில்லியில் 5 டிகிரி செல்சியஸ்க்கு கீழே சரிவு
UPDATED : டிச 15, 2024 02:26 PM
ADDED : டிச 15, 2024 02:23 PM

புதுடில்லி: வட மாநிலங்களில் கடும் குளிர் வாட்டத் தொடங்கியுள்ளது. தலைநகர் டில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை, 5 டிகிரி செல்சியஸ்க்கு கீழே சரிந்துள்ளது.
டிசம்பர் மாதம் வந்தாலே, வட மாநிலங்களில் கடும் குளிர் தட்ப வெப்பம் வாட்டத் தொடங்கி விடும். அதன்படி வெப்ப நிலை குறைந்து குளிர் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
வானிலை ஆய்வு மையம், வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் குளிர் அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளது. பஞ்சாப், ஹரியானா, உ.பி., மாநிலங்களில் கடும் குளிர் இருக்கும், ஜம்மு காஷ்மீர், லடாக்கில் பனிப்பொழிவும் இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த சீசனில் முதல் முறையாக, டில்லியில் இரவு நேர வெப்ப நிலை 4.5 டிகிரி செல்சியஸ் ஆக இன்று அதிகாலை பதிவாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் சில பகுதிகளில், இரவு நேர வெப்ப நிலை, பூஜ்யம் டிகிரிக்கு கீழே சென்று விட்டது. சிகர் மாவட்டத்தின் பதேபூரில், இரவு நேர வெப்ப நிலை, மைனஸ் 1.3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைந்து விட்டது. வட மாநிலங்களில் குளிர் வாட்டும் நிலையில், தென் மாநிலங்கள் மழையை எதிர்கொண்டுள்ளன. தமிழகத்தின் ஒரு சில தென் மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. வரும் வாரத்தில் புதுச்சேரி, கேரளா, கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உட்புற கர்நாடகத்தில் மழைப்பொழிவு இருக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.