டில்லி பல்கலை மாணவர் தேர்தல் முடிவு இன்று அறிவிக்கப்படுகிறது
டில்லி பல்கலை மாணவர் தேர்தல் முடிவு இன்று அறிவிக்கப்படுகிறது
ADDED : செப் 19, 2025 02:00 AM
புதுடில்லி:டில்லி பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவை தேர்தல் முடிவு இன்று அறிவிக்கப்பட உள்ளது. நேற்று காலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் துவங்கிய இந்த தேர்தலில், தலைவர் பதவிக்கு, காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ்., ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
டில்லி பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவை தேர்தல், நேற்று காலை, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் துவங்கியது. இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது. முதற்கட்டமாக, காலை 8:30 மணிக்கு துவங்கி, பகல், 1:00 மணி வரை தேர்தல் நடந்தது.
அதன் பின், பகல் 3:00 மணி முதல், இரவு 7:30 மணி வரை இரண்டாவது ஷிப்ட் தேர்தல் நடந்தது. தேர்தல் முடிவுகள், நாளை அறிவிக்கப்பட உள்ளன.
இந்த போட்டியில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் ஆதரவுடன் ஏ.பி.வி.பி.,யின் ஆர்யன் மான் என்ற மாணவர் தலைவர் பதவிக்கு போட்டியிடு கிறார்.
காங்கிரஸ் ஆதரவு என்.எஸ்.யு.ஐ., சார்பில் முதல் முறையாக, தலைவர் பதவிக்கு ஒரு பெண் போட்டியிடுகிறார். நந்திதா சவுத்ரி என்ற பெண்ணை எதிர்த்து, இடதுசாரிகள் ஆதரவு பெற்ற எஸ்.எப்.ஐ. ஏ.எஸ்.ஏ., என்ற அமைப்பின் சார்பில் அஞ்சலி போட்டியிடுகிறார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன.
வழக்கமாக, டில்லி பல்கலைக்கழக தேர்தலின் போது, கல்லுாரிகளின் வளாகங்களில் பிரசார எழுத்துகளும், போஸ்டர்களும் நிறைந்திருக்கும். அவற்றை சீரமைக்க அமைக்கப்பட்ட லிங்டோ கமிட்டி பரிந்துரை படி, இந்த ஆண்டில் கல்லுாரி வளாகங்களில் எவ்வித போஸ்டர்களும் ஒட்டப்படாமல் சுத்தமாக இருந்தன.