UPDATED : அக் 10, 2026 11:32 PM
ADDED : அக் 10, 2026 04:06 PM

நடிகர்களை வரவேற்கும் பா.ஜ.,
தமிழக சட்டசபை இடைத்தேர்தலில், த.வெ.க., வெற்றி பெற்று, திராவிட கழகங்களை குறிப்பாக அ.தி.மு.க.,வை மூன்றாம் இடத்திற்கு தள்ளி விட்டது. இந்த தேர்தல் முடிவுகள், டில்லி அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. பிரபல நடிகராக இருந்து, கட்சி துவங்கிய இரண்டே ஆண்டில் விஜய் ஆட்சியை பிடித்தது, டில்லி அரசியல் வட்டாரங்களை ஏற்கனவே பிரமிக்க வைத்து விட்டது.
தமிழகத்தில் சினிமாவும், அரசியலும் இரண்டற கலந்துள்ளதை தேசிய கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.,வும் வரவேற்கின்றன. இரண்டு திராவிட கட்சிகளையும் பின்னுக்கு தள்ள, சினிமா தான் உதவும் என்பதையும் டில்லி தலைவர்கள் புரிந்து கொண்டு விட்டனர்.
நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன் அரசியலுக்கு வர ஆசைப்படுவதுடன், அதற்கான வேலைகளிலும் இறங்கியுள்ளனர். இதை, பா.ஜ.,வின் டில்லி தலைவர்கள் வரவேற்கின்றனராம்.
இதற்கிடையே, தி.மு.க., - எம்.பி., ஒருவர், தேசிய கட்சிகளில் உள்ள தனக்கு நெருக்கமானவர்களுக்கு, 'வாட்ஸாப்'பில் தகவல் அனுப்புகிறாராம். அதில், 'சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், தி.மு.க.,வில் உட்கட்சி பிரச்னை துவங்கி விட்டது. இனி, நடிகர்கள் தான் தமிழகத்தை ஆட்சி நடத்துவர்' என, கூறி இருக்கிறாராம்.
வயதானோருக்கு கல்தா!
காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், அவரது சகோதரியும், லோக்சபா எம்.பி.,யுமான பிரியங்கா ஆகியோருக்கு ஆலோசனைகளை வழங்கவும், உதவி செய்யவும், கட்சியில் தனித்தனி குழுக்கள் உள்ளன. மறைந்த பிரதமர் ராஜிவிடம் பணியாற்றியவர்களின் குடும்ப உறுப்பினர்கள், இந்த குழுக்களில் இருந்தனர்.
தற்போது, அவர்களுக்கு பதிலாக இளைஞர்களை தங்கள் குழுக்களில் இருவரும் சேர்த்துள்ளனர். இந்த குழுக்களில் இருப்போர் அனைவருமே, 35 வயதிற்கு குறைவானவர்கள். ஐ.ஐ.எம்., போன்ற தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் படித்த இளைஞர் பட்டாளம் தான், ராகுலுக்கும், பிரியங்காவிற்கும் உதவுகிறது.
கரப்பான் பூச்சி கட்சியை குறித்து நேரடியாக குறிப்பிடாமல், 'சின்ன பசங்க எல்லாம் அரசியலுக்கு வந்தாச்சு... வயதானோரை துாக்கி அடியுங்கள்' என, 80 வயதிற்கு மேலாகும், கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்பாகவே ராகுல் கூறியது, மூத்த தலைவர்களுக்கு பிடிக்கவில்லையாம். கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் ராகுலால் ஓரங்கட்டப்பட்டு விட்டனர்.
டில்லியில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிராக, சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல், பிரியங்கா ஆகியோர், திடீரென ஆகாஷ்வாணி பவனில் நுழைந்து மரத்தடியில் அமர்ந்தனர். 'இந்த பவனிலிருந்து, தேர்தல் கமிஷன் அலுவலகத்தின் பின்பக்கம் செல்ல ஒரு வழி உள்ளது. எனவே, ஆகாஷ்வாணி பவனில் நுழைந்து இதை செய்யலாம்' என, ஆலோசனை அளித்தது, ராகுல் இளைஞர்கள் குழுவாம். இந்த குழுவுடன், எந்த நேரமும் போனில் தொடர்பு கொண்டு, தன் அதிரடி திட்டங்களை நிறைவேற்றி வருகிறாராம் ராகுல். 'இப்படி அராஜகமாக செயல்பட்டால், அது வன்முறையில் முடியும். இதை ராகுலுக்கு யார் சொல்வது?' என, நொந்து போயுள்ளனராம் காங்., மூத்த தலைவர்கள்.
பிரதமர் உத்தரவு!
'வரும், 2029ல் ராகுல் தான் பிரதமர்' என, காங்கிரசார் கூறி வருகின்றனர். 'பக்கத்து நாடான, நேபாளத்தில் எப்படி ஒரு, 'ராப்' பாடகரை அங்குள்ள இளைஞர்கள், பிரதமர் பதவியில் அமர வைத்தனரோ, அப்படி இங்கும் நடக்கும். மோடி காலம் முடிந்துவிட்டது. கம்புகளால் மோடியை அடித்து வெளியேற்றுவோம்' என, கண்டபடி பேசி வருகின்றனர். சமீபத்தில், ராகுல் தான் நடத்திய போராட்டங்களில், பிரதமர் மோடியை மரியாதை குறைவாகவும், ஆபாசமாகவும் பேசினார். தொடர்ந்து, பேசியும் வருகிறார்.
இந்த பேச்சுகளையும், ராகுலின் நடவடிக்கைகளையும், பா.ஜ.,வினர் உன்னிப்பாக கவனித்து வருவதுடன், அதற்கு பதிலடியும் அளித்து வருகின்றனர். இதையடுத்து, பிரதமர் மோடி, தன் கட்சியினருக்கு ஒரு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக பா.ஜ.,வினர் கூறுகின்றனர்.
'என்னை பற்றி ராகுல் எவ்வளவு கேவலமாக பேசினாலும் பரவாயில்லை. அதற்கு எதிராக நாமும் கீழ்தரமாக விமர்சனம் செய்யக் கூடாது. மக்கள் அனைத்தையும் பார்க்கின்றனர். யார் அவர்களுக்கு தேவை என்பதை மக்களே முடிவு செய்வர். நீங்கள் எதுவும் பேச வேண்டாம்' என, மோடி கறாராக சொல்லி விட்டாராம். காங்., மூத்த தலைவர்களுக்கும், ராகுலின் இந்த கீழ்தரமான விமர்சனம் பிடிக்கவில்லையாம். ஆனால், அவரிடம் இதை சொல்ல தயங்குகின்றனர்.
கருத்துக்கள் சொல்ல: ndussh@dinamalar.in
