UPDATED : அக் 24, 2026 05:17 PM
ADDED : அக் 24, 2026 05:14 PM

மீண்டும் அகிலேஷ் யாதவ்?
உ.பி.,யில் சட்டசபை தேர்தல் இன்னும் நான்கு மாதங்களில் நடைபெற உள்ளது. தற்போது, யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. எப்படியாவது பா.ஜ.,வை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதில், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் மும்முரமாக உள்ளார். இதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்.
பா.ஜ., உட்பட மற்ற கட்சிகள் பத்திரிகைகளில் இன்னும் விளம்பரத்தை தொடங்காத நிலையில், சமாஜ்வாதி கட்சி விளம்பரம் செய்ய ஆரம்பித்து விட்டது. ‘மீண்டும் அகிலேஷ்’ என்கிற வாசகத்துடன், விளம்பரங்கள் வரத் தொடங்கிவிட்டன. கடந்த 2012லிருந்து 2017 வரை உ.பி., முதல்வராக இருந்தவர் அகிலேஷ். எனவே ‘மீண்டும் அகிலேஷ்’ என்ற முழக்கத்துடன் களமிறங்கியுள்ளது, சமாஜ்வாதி கட்சி.
அத்துடன், பா.ஜ.,விற்கு எதிராக எப்படி பிரசாரம் செய்வது என்பது குறித்தும், ஆலோசனைகளை நடத்தி வருகிறார் அகிலேஷ். பா.ஜ., தரப்பிலும் பல ஆலோசனைக் கூட்டங்கள் நடந்து வருகின்றன. ஆனால், காங்கிரஸ் எங்கே இருக்கிறது என, தேடவேண்டிய நிலை உள்ளது. 2022, உ.பி., சட்டசபை தேர்தலில், சமாஜ்வாதியும், காங்கிரசும் தனித்தனியாக போட்டியிட்டன.
மொத்தம் 403 தொகுதிகளைக் கொண்ட உ.பி.,யில் சமாஜ்வாதி கட்சி, 111 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 399 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட, காங்கிரசுக்கு இரண்டில் மட்டுமே வெற்றி. ஆனால் 2024 பார்லிமென்ட் தேர்தலில் சமாஜ்வாதி- – காங்., கூட்டணி அமைத்து போட்டியிட்டு, பா.ஜ.,விற்கு கடும் போட்டியை ஏற்படுத்தி, அதிக தொகுதிகளை வென்றன.
வரும் சட்டசபை தேர்தலில், 100க்கும் அதிகமான தொகுதிகளை கேட்கிறது காங்கிரஸ். ஆனால், ‘35 தொகுதிகளுக்கு மேல் கொடுக்க முடியாது’ என்று அகிலேஷ் சொல்லிவிட்டாராம். இதனால் கூட்டணியில் காங்., இணையுமா அல்லது தனித்து போட்டியிடுமா என்பது குறித்து ராகுல் தான் முடிவெடுப்பார்.
சந்தேகம்!
சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தன், 62 வது பிறந்த நாளை கொண்டாடினார். ஜனாதிபதி, பிரதமர் உட்பட பலரும் அமித் ஷாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர். பா.ஜ.,வினரை அடுத்து முதலில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தது, தமிழக முதல்வர் விஜய்தானாம். இது கூட்டணியில் உள்ள காங்கிரசாருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.
பா.ஜ., – ஆர்.எஸ்.எஸ்., பக்கம் விஜய் போகிறாரா எனவும், அக்கட்சியினர் சந்தேகப்படுகின்றனர். சமீபத்தில் பிரதமர் மோடி சென்னை வந்த போது, அவரை விமான நிலையத்தில் வரவேற்றதுடன் அல்லாமல், 1 மணி நேரம் காத்திருந்து வழியனுப்பி வைத்தார் முதல்வர் விஜய். இதனால் மகிழ்ந்து போன பிரதமர், ‘தமிழக அரசுடன் இணைந்து, முன்னேற்றத்திற்காக அனைத்து உதவிகளையும் செய்ய தயார்’ என, உறுதியளித்துள்ளார்.
பா.ஜ.,வை, த.வெ.க.,வோ அல்லது முதல்வரோ அதிகமாக விமர்சிப்பதேயில்லை என்பதால், டில்லி காங்., தலைவர்களுக்கு விஜய் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
வருத்தம்!
‘வீ த லீடர்ஸ்’ தலைவரும், முன்னாள் தமிழக பா.ஜ., தலைவருமான அண்ணாமலை குறித்து, டில்லி பா.ஜ., வட்டாரங்களில் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது. குறிப்பாக, சமீபத்தில் பா.ஜ.,விற்கு எதிராக அவர் விடுத்துள்ள அறிக்கை, பல மூத்த தலைவர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
‘அண்ணாமலையின், ‘என் மண்; என் மக்கள்’ யாத்திரைக்கு பிரதமர் மோடியும், அமித் ஷாவும் பெரும் ஆதரவு அளித்ததுடன், பார்லி.,யிலும் அண்ணாமலையை பாராட்டி பேசியுள்ளார் மோடி. அப்படியிருக்க அண்ணாமலை ஏன் இப்படி நடந்து கொள்கிறார்?’ என, பா.ஜ., மூத்த தலைவர்கள் வருத்தப்படுகின்றனர்.
இது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், மூத்த தலைவர் ஒருவர் கேட்டபோது, ‘அண்ணாமலை பற்றி நான் ஏற்கனவே சொன்னதுதான் இப்போது நடக்கிறது. அவருக்கு பொருளாதார ரீதியாக ஏதோ ஆபத்து வரும் போலிருக்கிறது. அதிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவே, இப்படி கட்சிக்கு எதிராக பேசி வருகிறார்’ என்றாராம் அமித் ஷா.
‘தமிழக பா.ஜ., பார்வையாளராக நியமிக்கப்பட்ட ராம் மாதவ், கள நிலவரம் தொடர்பான தன் அறிக்கையை சமர்ப்பித்து விட்டார்’ என்று, செய்திகள் அடிபடும் நிலையில், ‘அப்படி எந்த அறிக்கையும் அளிக்கவில்லை’ என்கின்றனர், அமித் ஷாவிற்கு நெருக்கமானவர்கள்.
‘தமிழக மாவட்டங்கள் அனைத்திற்கும் ராம் மாதவ், ‘விசிட்’ செய்து அறிக்கை தருவார். ஜனவரியில் அறிக்கை சமர்ப்பிக்கும்படி தலைமை கேட்டுள்ளது. அதுவரை நயினார் நாகேந்திரன் தமிழக பா.ஜ., தலைவராக நீடிப்பார்’ என்கிறது டில்லி பா.ஜ., வட்டாரங்கள்.
சைவ சாப்பாடு!
வெளிநாட்டு அதிபர்கள் டில்லிக்கு வந்தால், அவர்களுக்கு பிரதமர் விருந்து அளிப்பது வழக்கம். இது, டில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் நடைபெறும். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அசைவம், சைவம் என, உணவுகள் பறிமாறப்பட்டன. அப்போது, இந்த விருந்தில் அசைவம் சாப்பிடுவோரின் தட்டின் முன், ஒரு ரோஜா வைக்கப்பட்டிருக்கும்.
இதைப் பார்த்து, உணவு பரிமாறுவோர், இவர் அசைவம் சாப்பிடுவர் என புரிந்து, உணவு பறிமாறுவராம். ஆனால், சமீப காலமாக வெளிநாட்டு அதிபர்களுக்கு சைவ உணவு மட்டுமே விருந்தில் வழங்கப்படுகிறது. ‘பிரதமர் மோடி சைவம் என்பதால் இப்படி செயல்படுகிறார்’ என, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. ஆனால், ‘பிரதமர் மோடி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள, சிறப்பு உணவை வெளிநாட்டினருக்கு வழங்குவதோடு, அந்த உணவை பிரபலப்படுத்துகிறார்’ என்கின்றனர் அதிகாரிகள்.
சிறுதானிய தோசை போன்று தென்மாநில உணவு ஒன்று அல்லது இரண்டு, வெளிநாட்டு அதிபர்களுக்கு விருந்தில் வழங்கப்படுகிறது. இந்த விருந்தில், காங்கிரசை சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலோ, அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவோ பங்கேற்பதில்லை.
விருந்தை புறக்கணித்து வந்த ராகுல், பின் பிரதமருக்கு கடிதம் எழுதி, ‘வெளிநாட்டு அதிபர்களை நான் சந்திக்க வேண்டும்’ என கேட்டார். அதன் பின் அவருக்கு அழைப்பு அனுப்புவது இல்லையாம். இதனால் மல்லிகார்ஜுன கார்கேவும் விருந்தில் பங்கேற்பதை நிறுத்திவிட்டார்.
‘எப்போது வெளிநாடு சென்றாலும், இந்திய அரசுக்கு எதிராக ராகுல் விமர்சனம் செய்வதால், இங்கே வெளிநாட்டு பிரதமர்களை சந்தித்தாலும், அரசுக்கு எதிராகத்தான் பேசுவார் என்பதால் அவரை அழைப்பதில்லை’ என்கின்றனர் அதிகாரிகள்.
கருத்துக்கள் சொல்ல: ndussh@dinamalar.in
