ADDED : ஜன 12, 2025 01:40 AM

புதுடில்லி: காங்கிரசில் கோஷ்டி பூசல் என்பது சாதாரண விஷயம்; ஆனாலும், இக்கட்சி ஆட்சி செய்யும் கர்நாடகாவில் ஏராளமான பிரச்னைகள். 'முதல்வர் சித்தராமையா, தன் மனைவிக்கு மைசூரில் மலிவு விலையில் நிலம் ஒதுக்கியுள்ளார்' என, குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் விசாரணை நடத்த, கவர்னர் அனுமதி அளித்துவிட்டார்; கர்நாடகா உயர் நீதிமன்றமும், 'கவர்னர் செய்தது சரி' என கூறிவிட்டது; இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறையும் உள்ளே நுழைந்து விட்டது.
முதல்வர் சித்தராமையா கலக்கத்தில் உள்ளார். 'விசாரணை முடிவு வெளியானால் பதவி விலகவும் வாய்ப்புகள் உள்ளன. நமக்கு பதவி போனாலும் பரவாயில்லை... தன் எதிரியான துணை முதல்வர் சிவகுமார் முதல்வராகக் கூடாது' என்பதில் குறியாக உள்ளார் சித்தராமையா.
தனக்கு நெருக்கமான அமைச்சர்களையும், எம்.எல்.ஏ.,க்களையும் அடிக்கடி விருந்திற்கு அழைத்து, ஆலோசனை நடத்தி வருகிறார், சித்தராமையா. 'ஒருவருக்கு ஒரு பதவி என்கிற கொள்கையை இங்கு அமல்படுத்த வேண்டும்' என, இந்த ஆலோசனைக் கூட்டங்களில் வலியுறுத்தப்படுகிறது.
சிவகுமார் துணை முதல்வராக மட்டுமல்லாமல், கட்சியின் மாநில தலைவராகவும் உள்ளார். அவரை ஒழித்துக் கட்டவே, இவர் இப்படி கூட்டங்களை நடத்தி வருகிறார்; இது, கட்சிக்குள் பலவித பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது.
இது மட்டுமல்லாமல், வேறு ஒரு விஷயத்தையும் தன் ஆதரவாளர்களிடம் சொல்லி வருகிறாராம் சித்தராமையா. 'ஒரு வேளை, நான் பதவி விலக நேர்ந்தால், அடுத்த முதல்வர் ஒரு பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவராகவோ அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவோ இருக்க வேண்டும்' என்கிறாராம் சித்தராமையா. இது அமல்படுத்தப்பட்டால், சிவகுமார் முதல்வர் ஆசை, 'அம்பேல்!'
இது குறித்து, டில்லி தலைமையிடம் புகார் செய்துள்ளார் சிவகுமார். என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகிறதாம் காங்., தலைமை.

