டில்லி உஷ்ஷ்ஷ்: புது வீட்டிற்கு செல்கிறார் பிரதமர்!
டில்லி உஷ்ஷ்ஷ்: புது வீட்டிற்கு செல்கிறார் பிரதமர்!
ADDED : ஜூன் 22, 2025 12:56 AM

புதுடில்லி: டில்லியில் புதிய பார்லிமென்ட் உள்ளிட்ட பல மத்திய அரசு அலுவலகங்கள் உள்ள இடம், 'சென்ட்ரல் விஸ்டா' என, அழைக்கப்படுகிறது. அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும், ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக மோடி எடுத்த முடிவு இது. இதில், புதிய பார்லிமென்ட் தயாராகி, இப்போது, கூட்டத்தொடர் இங்கு நடக்கிறது; மற்ற அரசு அலுவலகங்கள் கட்டி முடியும் தருவாயில் உள்ளன.
பிரதமருக்கும், துணை ஜனாதிபதிக்கும் புதிய வீடுகள் இங்கு கட்டப்பட்டன. துணை ஜனாதிபதி வீடு கட்டப்பட்டு, அவர் அங்கு குடி சென்றுவிட்டார். பிரதமரின் இல்லமும் ஏறக்குறைய தயாராகிவிட்டதாம். ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி மாளிகைக்கு மத்தியில் பிரதமரின் இல்லம் அமைந்துள்ளது.
'ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டம்பரில் புது வீட்டிற்கு பிரதமர் மோடி செல்வார்' என, சொல்லப்படுகிறது.
இந்த வீடு, அதிநவீன வசதிகளுடன், வான்வழி தாக்குதலை சமாளிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. 18 அறைகள் அடங்கிய இந்த இல்லத்தில், 'வீடியோ கான்பிரன்ஸ்' வாயிலாக, வெளிநாட்டு அதிபர்களுடன் பேசும் வசதியும், அமைச்சரவைக் கூட்டம் நடத்த பெரிய ஹால் என, பல வசதிகள் உள்ளதாம்.
தற்போது, 'லோக் கல்யாண்' சாலையில் பிரதமர் வீடு உள்ளது. இங்கு மரங்கள் அதிகம்; எப்போதும் மயில்களைப் பார்க்க முடியும்; அத்துடன், பல்வேறு பறவைகளும் இங்கு உள்ளன.
ஆனால், பிரதமரின் புதிய வீட்டில் இத்தனை மரங்கள் இல்லை; இதனால், புதிய வீட்டில் ஒரு தோட்டம் அமைக்க உத்தரவிட்டுள்ளாராம் மோடி. இந்த தோட்டத்தில், பல வகையான துளசி செடிகள் வைக்கப்பட உள்ளதாம். மோடிக்கு, துளசி மிகவும் பிடிக்கும் என்பதால் இந்த ஏற்பாடு!