ADDED : ஆக 19, 2025 05:39 AM

கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் திடீரென டெங்கு பாதிப்பு உயர்ந்து வருவது, பொதுமக்களை அச்சமடைய வைத்துள்ளது.
அம்மாநிலத்தின் 16 மாவட்டங்களில் கடந்த 20 நாளில் மட்டும் புதிதாக 1,633 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து, நோய் தடுப்பு நடவடிக்கைகளை அம்மாநில சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.
டெங்குவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 15 மாவட்டங்கள் தெற்கு வங்கத்தைச் சேர்ந்தவை. வடக்கு வங்கத்தில் ஒரேயொரு மாவட்டத்தில் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநில சுகாதாரத் துறை தரவுகளின் படி கடந்த 2022ல் டெங்குவால் 67,271 பேர் பாதிக்கப்பட்டனர். 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2023ல் ஒரு லட்சத்து 7,000 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
பின்னர் அடுத்த ஆண்டு பாதிப்பு குறைந்த நிலையில், 31,100 பேர் டெங்கு பாதிப்புக்கு சிகிச்சை பெற்றனர். தற்போது மீண்டும் டெங்கு பாதிப்பு மெல்ல உயர்ந்து வருவதால், அம்மாநில மக்கள் அச்சமடைந்துள்ளனர்.