தலைநகரில் நிலவும் கடும் பனிப்பொழிவால் விமான சேவைகள் பாதிப்பு
தலைநகரில் நிலவும் கடும் பனிப்பொழிவால் விமான சேவைகள் பாதிப்பு
ADDED : டிச 15, 2025 09:53 AM

புதுடில்லி: டில்லியில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. விமானங்களின் நிலை அறிந்து விமான நிலையத்திற்கு வருமாறு பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.
குளிர்காலம் தொடங்கிய பிறகு டில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால், வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ஆங்காங்கே நெருப்பு மூட்டி பொதுமக்கள் குளிர் காய்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடும் பனிப்பொழிவு காரணமாக விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. விமானங்களின் நிலை அறிந்து டில்லி விமான நிலையத்திற்கு வருமாறு பயணிகளுக்கு இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா போன்ற விமான நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; கடும் பனிபொழிவால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. நாங்கள் வானிலையை தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறோம். உங்களைப் பாதுகாப்பாகவும், சரியான நேரத்திலும் கொண்டு சென்று விடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறோம். எங்கள் வலைதளம் அல்லது செயலியின் மூலம் உங்கள் விமான நிலையை அறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். எங்கள் குழுவினர் உங்களுக்கு உதவுவார்கள், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

