முதல்வர் ஆதரவு அமைச்சர்களுடன் மோதும் துணை முதல்வர் சிவகுமார்
முதல்வர் ஆதரவு அமைச்சர்களுடன் மோதும் துணை முதல்வர் சிவகுமார்
ADDED : பிப் 20, 2024 11:22 PM
முதல்வர் சித்தராமையாவின் ஆதரவு அமைச்சர்களுடன், துணை முதல்வர் சிவகுமார் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார்.
கர்நாடக சட்டசபைக்கு கடந்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடந்தது. அதற்கு முன்பே முதல்வர் நாற்காலிக்கு சித்தராமையாவும், சிவகுமாரும் மோதிக் கொண்டனர். காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுல் ஆதரவுடன் சித்தராமையா முதல்வர் ஆனார். சோனியாவின் கரிசனத்தால் சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவி கிடைத்தது.
இரண்டரை ஆண்டு
இரண்டரை ஆண்டுகளுக்கு பின்பு, முதல்வர் மாற்றம் நடக்கும் என்றும், சிவகுமார் முதல்வர் ஆவார் என்று அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கூறி, தங்களை தாங்களே சமாதானப்படுத்திக் கொண்டனர்.
கோபம் அடைந்த முதல்வர் சித்தராமையாவின் ஆதரவு அமைச்சர்கள், 'எங்கள் தலைவரே ஐந்து ஆண்டுகளும் முதல்வர்' என்றனர். கட்சி மேலிடம் உத்தரவின்படி, முதல்வர் பதவி பற்றி இருவரின் ஆதரவாளர்களும், எதுவும் பேசாமல் அமைதியாக உள்ளனர்.
இந்நிலையில், முதல்வர் பதவியை எதிர்நோக்கும் சிவகுமார், இப்போது இருந்தே, அதற்கான வேலைகளை பார்க்க ஆரம்பித்து உள்ளார். தனக்கு எதிராக பேசும் அமைச்சர்களுக்கு, முடிவு கட்ட நினைக்கிறார்.
சித்தராமையாவின் ஆதரவு அமைச்சர்களை, லோக்சபா தேர்தலில் களம் இறக்கி, அவர்களை எப்படியாவது வெற்றி பெற வைத்து, தேசிய அரசியலுக்கு அனுப்பி வைக்க நினைக்கிறார்.
இதன் மூலம் எளிதில் முதல்வர் ஆகிவிடலாம் என்பது, அவரது கணக்கு. ஆனால் அமைச்சர்களுக்கோ, லோக்சபா தேர்தலில், போட்டியிட விருப்பமே இல்லை.
மேலிடத்துக்கு அழுத்தம்
ஆனாலும் மேலிடத்துக்கு சிவகுமார் அழுத்தம் கொடுத்து வருகிறார். இதனால் சிவகுமாருக்கும்,
சித்தராமையா ஆதரவு அமைச்சர்களுக்கும் இடையில், மோதல் போக்கு நீடித்து வருகிறது. அமைச்சர்களுக்கு மட்டும் இல்லை. துணை முதல்வர் சிவகுமாருக்கும், லோக்சபா தேர்தலில் போட்டியிட தகுதி உள்ளது என்று, அமைச்சர் மஹாதேவப்பா கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
பெலகாவி அரசியலில் சிவகுமார் தேவையின்றி, மூக்கை நுழைந்ததால் தான், முந்தைய காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அரசு கவிழ்ந்தது.
இப்போதும் பெலகாவி அரசியல் விவகாரங்களில், அவர் தலையிட்டு வருகிறார். அம்மாவட்டத்தின் பலம் வாய்ந்த தலைவராக உள்ள சதீஷ் ஜார்கிஹோளி, பெலகாவி, சிக்கோடி தொகுதிகளில் தான் கூறும் வேட்பாளர்களுக்கே 'சீட்' தர வேண்டும் என்று கூறுகிறார்.
ஆனால் சிவகுமாரரோ, அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் மகன் மிருணாளுக்கு பெலகாவி 'சீட்' கொடுக்க நினைக்கிறார்.
குற்றச்சாட்டு
இதுதவிர முதல்வரின் ஆதரவு அமைச்சர்கள் சிலரை, மட்டம் தட்டும் வேலையில் சிவகுமார் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில், சிவகுமார், அமைச்சர்கள் மோதல், காங்கிரஸ் மேலிடத்துக்கு தேவை இல்லாத தலைவலியாக மாறி உள்ளது.
- நமது நிருபர் -

