ADDED : செப் 19, 2024 05:59 AM

பெங்களூரு: ''போதை பொருள் பயன்பாட்டை ஒழிக்க உள்துறை அமைச்சர் தலைமையில் செயல்படை உருவாக்கப்படும். போதை தடுப்பு சட்டங்களில் தகுந்த திருத்தங்கள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
வெளிநாடுகளில் இருந்து போதை பொருட்களை கடத்தி வந்து, பெங்களூரு உட்பட மாநிலத்தின் பல நகரங்களுக்கு கொண்டு சென்று ரகசியமாக விற்பனை செய்யப்படுகிறது. அதுவும் கல்லுாரி மாணவர்கள், செல்வாக்கு மிக்கவர்களின் பிள்ளைகளை குறி வைத்து செயல்படுகின்றனர்.
* முக்கிய ஆலோசனை
சில நடன பார்கள், பப்களுக்கும் வினியோகம் செய்யப்படுகின்றன. இதன் பின்னணியில் பெரிய நெட்வொர்க் உள்ளது. போதை பொருளால், இளைய சமுதாயம் சீரழிந்து வருகிறது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்தும், போதை பொருள் கடத்தலை தடுக்க முடியவில்லை.
இந்நிலையில், போதை பொருட்களை கட்டுப்படுத்துவது குறித்து, பெங்களூரில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில், முதல்வர் சித்தராமையா, நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், மருத்துவ கல்வி துறை அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல், ஐ.டி., - பி.டி., துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, தலைமை செயலர் ஷாலினி ரஜ்னீஷ், போலீஸ் டி.ஜி.பி., அலோக் மோகன், பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா, உளவு துறை கூடுதல் டி.ஜி.பி., ஹேமந்த் நிம்பால்கர், அனைத்து மண்டல ஐ.ஜி.,க்கள் உட்பட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
* சட்ட திருத்தம்
கூட்டத்துக்கு பின், முதல்வர் சித்தராமையா கூறியதாவது:
போதை பொருளின் அச்சுறுத்தலை அரசு மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. போதை தடுப்பு சட்டங்களில் தகுந்த திருத்தங்கள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். போதை பொருள் விற்பனை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவது உட்பட சட்டங்கள் மேலும் வலுப்படுத்தப்படும்.
போதை பொருள் பயன்பாட்டை ஒழிக்க உள்துறை அமைச்சர் தலைமையில் செயல்படை உருவாக்கப்படும். மாநிலத்தில் போதை பொருள் கட்டுப்படுத்தும் பணியை இந்த செயல்படை முழுமையாக கண்காணிக்கும்.
விற்பனை மற்றும் வினியோகத்தை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். போதை பொருள் பயன்பாடு அதிகமாக உள்ள போலீஸ் நிலைய பகுதிகளை கண்டறிந்து, அந்த இடங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* இன்ஸ்பெக்டர்கள்
தவறும் பட்சத்தில் அந்தந்த போலீஸ் நிலையத்தின் இன்ஸ்பெக்டர்களே பொறுப்பாளிகள். போலீசாருக்கு தெரியாமல் போதை பொருள் விற்பனை செய்ய முடியாது. பள்ளிகள், கல்லுாரிகள், உறைவிட பள்ளிகளில் மாணவர் - போலீஸ் அமைப்பு செயல்படுத்தப்படும். இப்பணியில் சாரணர் இயக்க மாணவர்கள் இருப்பர்.
மருந்தகங்களில் சிந்தடிக் டிரக்ஸ், சைக்கோட்ரோபிக் பொருட்களை விற்பனை செய்தால் உரிமத்தை ரத்து செய்யுங்கள். மருந்தகங்களில் தொடர்ந்து கண்காணித்து, சோதனை நடத்த வேண்டும். மாவட்ட அளவிலும் தடுப்பு குழுக்கள் மிகவும் தீவிரமாக செயல்பட வேண்டும்.
* விழிப்புணர்வு
கல்வி துறையும், சமூக நலத்துறையும், தங்கள் அதிகார வரம்பிற்கு உட்பட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் விடுதிகளில் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
போதை பொருள் பயன்பாட்டை ஒரு போதும், அரசு பொறுத்து கொள்ளாது. மாணவர்கள், இளைஞர்கள் போதைக்கு பலியாகாமல் தடுக்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
...புல் அவுட்...
கடந்த ஒன்றரை ஆண்டில், மாநிலத்தில் போதை பொருள் பயன்பாடு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், மருந்தகங்களில் விற்கப்படும் வலி நிவாரணி மற்றும் துாக்க மாத்திரையால் தான் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
பரமேஸ்வர், அமைச்சர், உள்துறை
***

