சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை; பக்தர்கள் பயணத்தை தவிர்க்க அறிவுறுத்தல்
சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை; பக்தர்கள் பயணத்தை தவிர்க்க அறிவுறுத்தல்
UPDATED : ஆக 01, 2026 09:46 PM
ADDED : ஆக 01, 2026 09:41 PM

பத்தனம்திட்டா: நிறை புத்தரிசி பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை ஆகஸ்ட் 2 மாலை திறக்கப்படவுள்ளது. தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக சபரிமலை பயணத்தை பக்தர்கள் தவிர்க்கும்படி, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அறிவுறுத்தியுள்ளது.
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் மாத பூஜைக்காக ஒவ்வொரு மாதமும் ஐந்து நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடக்கும். ஆடி மாதத்திற்காக சபரிமலை கோவில் நடை வரும் 16ம் தேதி திறக்கப்பட்டு 21ம் தேதி இரவு அடைக்கப்படும். பின்னர், ஓணம் பண்டிகையை முன்னிட்டு, மீண்டும் இம்மாதம் 24ம் தேதி நடை திறக்கப்பட்டு, 28 ம் தேதி இரவு வரை தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.
இந்நிலையில், ஆண்டுதோறும் கோலாகலமாக நடக்கும் நிறை புத்தரிசி பூஜைக்காக சபரிமலை கோவில் நடை மாலை 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது. கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிகழகத்தின் தென்காசியில் இருந்தும் புதிதாக விளைந்த நெற்கதிர்களை அய்யப்பனுக்கு படைப்பதே நிறை புத்தரிசி பூஜையாகும்.
நாளைய பூஜைக்கு பின் சன்னிதானத்திற்கு வரும் பக்தர்களுக்கு, நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்படும்.
எனவே, இந்த பூஜையில் பங்கேற்க திரளான பக்தர்கள் ஆன்லைன் வரிசையில் முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், கேரளாவில் பரவலாக கனமழை பெய்து வருவதால், தாழ்வான இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பத்தனம்திட்டா மாவட்டம் அருகே உள்ள கேட்டாயம், இடுக்கி மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
சபரிமலை அய்யப்ப பக்தர்கள் புனித நதியாக போற்றி வரும் பம்பையிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், நிறை புத்தரிசி பூஜைக்கு வருவதை பக்தர்கள் தவிர்க்குமாறு திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.
