ADDED : நவ 02, 2024 03:38 AM

சிக்கமகளூரு: கர்நாடகாவில் மலைக்கோவிலில் தரிசனம் செய்ய சென்ற பக்தர்கள், கால்தவறி கீழே விழுந்ததில் 12 பேர் காயமடைந்தனர்.
கர்நாடகாவில் சிக்கமகளூரு மாவட்டத்தின் பிண்டிகாவில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில், தேவிரம்மா கோவில் உள்ளது. இந்த கோவில், ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்படுவது வழக்கம். செங்குத்தான மலைப்பகுதியில் ஏறி, இந்த கோவிலை அடைய வேண்டும்.
இந்தாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, தேவிரம்மா கோவில் கடந்த மாதம் 30ம் தேதி திறக்கப்பட்டது.
இதையடுத்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வந்தனர். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் கனமழை பெய்ததால், மலைப்பாதை முழுதும் ஈரப்பதத்துடன் இருந்தது. பக்தர்கள் செல்ல வசதியாக, தகுந்த முன்னேற்பாடு களை மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் மேற்கொண்டனர்.
ஆனாலும், கூட்டம் அதிகம் இருந்ததால், பக்தர்கள் சிலர், கால் தவறி கீழே சரிந்து விழுந்தனர். இதையடுத்து, மீட்புக்குழுவினர் கயிறு கட்டி பக்தர்களை மீட்டனர். இந்த விபத்தில், 12 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.