இவர் தான் ஹரியானா முதல்வர் வேட்பாளர்! பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்த பா.ஜ!
இவர் தான் ஹரியானா முதல்வர் வேட்பாளர்! பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்த பா.ஜ!
ADDED : செப் 15, 2024 09:35 PM

சண்டிகர்: நயப் சிங் சைனி தான் ஹரியானா பா.ஜ., முதல்வர் வேட்பாளர் என்று அமைச்சரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.
ஹரியானாவில் அக்டோபர் 5ம் தேதி சட்டபேரவைத் தேர்தல் நடக்கிறது. அக்டோபர் 8ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. 2019ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைத்தது.
2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்பாக கூட்டணி ஆட்சியில் முதல்வராக மனோகர்லால் கட்டார் இருந்தார். பின்னர் கூட்டணி முறிந்தவுடன் அவருக்கு பதிலாக நயப் சிங் சைனி முதல்வரானார். மனோகர்லால் கட்டார் முதல்வர் பதவியில் இருந்த தருணத்தில் அமைச்சராக இருந்த அனில் விஜ்க்கு, சைனி முதல்வரான போது அமைச்சர் பதவி தரப்படவில்லை. ஆனால் தற்போதைய தேர்தலில் அவர் போட்டியிட தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
அதிருப்தியில் இருந்த அனில் விஜ், முதல்வர் பதவியை கைப்பற்றி விடலாம் என்ற கனவில், மக்கள் தம்மை தான் முதல்வராக்க விரும்புகிறார்கள் என்று கூறி வருகிறார். இந் நிலையில், நயப் சிங் சைனி தான் ஹரியானா பா.ஜ., முதல்வர் வேட்பாளர் என்று அமைச்சரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறி உள்ளதாவது; 3வது முறையாக மக்களின் ஆதரவு பா.ஜ.,வுக்கு கிடைக்கும் என்பது நிச்சயம். வாக்காளர்கள் 3வது முறையாக ஹரியானாவை பா.ஜ., ஆள வாய்ப்பு தருவார்கள். காங்கிரசை மக்கள் தோற்கடிப்பார்கள்.
ஏராளமான மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இளைஞர்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்பட்டு உள்ளன. மகளிர் முன்னேற்றத்துக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.