அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தார்வாட் கலெக்டர் ஆலோசனை
அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தார்வாட் கலெக்டர் ஆலோசனை
ADDED : பிப் 15, 2024 06:33 AM

தார்வாட் : லோக்சபா தேர்தலுக்காக, தலைமை தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஹூப்பள்ளி - தார்வாட் கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான திவ்யாபிரபு ஆலோசனை நடத்தினார்.
லோக்சபா தேர்தலுக்கு தயாராவது குறித்து, தலைமை தேர்தல் ஆணையம், அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது.
அதன் அடிப்படையில், அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும், தேவையான ஏற்பாடுகள் செய்யும்படி உத்தரவிடப்பட்டது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை உறுதி செய்து கொள்ளும் வி.வி.பேட் இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது.
இதற்கிடையில், வெவ்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன், ஹூப்பள்ளி - தார்வாட் கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான திவ்யாபிரபு நேற்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:
இந்தாண்டுக்குரிய இறுதி வாக்காளர் பட்டியல், ஜனவரி 22ம் தேதி வெளியிடப்பட்டது. ஒவ்வொரு வார்டுகளிலும் வாக்காளர் பெயர்கள் சரியாக இருக்கிறதா என்பதை, பட்டியலில் சரிபார்க்கும் பணிகள் நடக்கின்றன.
அரசியல் கட்சியினரும், பூத் முகவர்களை நியமனம் செய்து, சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டால் வசதியாக இருக்கும். லோக்சபா தேர்தலுக்காக, தலைமை தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, தேவையான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
தகுதி வாய்ந்தவர்கள், இப்போதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து கொள்ள வாய்ப்பு உள்ளது. யாரும் ஓட்டு போட வாய்ப்பின்றி வஞ்சிக்கப்பட கூடாது என்பதில் கவனமாக இருப்பது நம் கடமை.
இவ்வாறு அவர்பேசினார்.

