தாதா பிஷ்னோய்க்கு போலீசுடன் தொடர்பா? 'டிவி' பேட்டி விவகாரத்தில் நீதிமன்றம் கேள்வி
தாதா பிஷ்னோய்க்கு போலீசுடன் தொடர்பா? 'டிவி' பேட்டி விவகாரத்தில் நீதிமன்றம் கேள்வி
ADDED : அக் 31, 2024 05:57 AM

ஹரியானா: சிறையில் இருந்தபடியே பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் தனியார் தொலைக்காட்சிக்கு நேர்க்காணல் வழங்கிய விவகாரத்தில் அவருக்கும், போலீசாருக்கும் தொடர்பு உள்ளதா என பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பஞ்சாபைச் சேர்ந்த பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் மீது பல்வேறு கொலை, அடிதடி, ஆள்கடத்தல் வழக்குகள் உள்ளன. பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலையிலும், அவர் மூளையாகச் செயல்பட்டுள்ளார்.
மஹாராஷ்டிராவின் மும்பையில் சமீபத்தில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த பாபா சித்திக் கொல்லப்பட்ட வழக்கிலும் இவருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. தற்போது சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய், கடந்த 2022 மற்றும் 2023ல் சிறையில் இருந்தபடி அளித்த சில நேர்க்காணல் சமூக வலைதளங்களில் பரவின.
பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின்உத்தரவை அடுத்து, இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர். இதில், பஞ்சாப் சிறை ஒன்றில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக லாரன்ஸ் பிஷ்னோய் நேர்க்காணல் அளித்தது தெரியவந்தது. இந்த விவகாரத்தில், இரு டி.எஸ்.பி.,க்கள் உட்பட ஏழு போலீசாரை பஞ்சாப் அரசு சஸ்பெண்ட் செய்தது.
இந்நிலையில், நேர்க்காணல் தொடர்பான சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்த அறிக்கை குறித்து நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இது தொடர்பான விசாரணையின் போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: சிறப்பு விசாரணைக் குழு தாக்கல் செய்த அறிக்கை, பிஷ்னோய் மற்றும் போலீசாருக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்த சந்தேகத்தை எழுப்புகிறது. சிறையில் போலீசார் குற்றவாளியை மின்னணு சாதனத்தை பயன்படுத்த அனுமதித்துஉள்ளனர்.
அங்கிருந்து நேர்க்காணல் நடத்த 'ஸ்டுடியோ' போன்ற வசதியை ஏற்டுத்தி தந்துள்ளனர். அவர்களின் உதவியுடன், சிறையில் இருந்தபடியே மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் பிஷ்னோய் ஈடுபட்டுள்ளார். இந்த விவகாரத்தில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான அரசு மீது திருப்தி இல்லை.
இந்த வழக்கில், ஏழு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பேர் மட்டுமே அதிகாரிகள், மீதமுள்ளவர்கள் கீழ்மட்ட ஊழியர்கள். இந்த விவகாரத்தில், கீழ்மட்ட ஊழியர்களை பலிகாடா ஆக்க வேண்டாம் என அரசுக்கு ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.
பஞ்சாப் சிறையில் இருந்து அவர் நேர்க்காணல் அளித்தது தொடர்பான பிரமாண பத்திரமும் அதிகாரிகளால் இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை. பஞ்சாப் சிறையில் நேர்காணல் எதுவும் நடக்கவில்லை என்று போலீஸ் டி.ஜி.பி., கூறியது ஏன்? சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது குற்றச் சதிச் சட்டத்தின் '120-பி' பிரிவை ஏன் பயன்படுத்தப்படவில்லை.
போலீசாரின் உதவியுடன் நேர்க்காணல் நடந்துள்ளது தெரியவருவதால், மேலும் பல குற்றங்களை குற்றவாளி செய்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டியது முக்கியம். கடந்த ஆண்டு பதிண்டா சிறையில் இருந்தபோது பிஷ்னோய் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி குறித்து புதிதாக விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.