ஜார்ஜ் சோரசிடம் பணம் வாங்கினேனா? பிரதமரின் ஆலோசகர் விளக்கம்!
ஜார்ஜ் சோரசிடம் பணம் வாங்கினேனா? பிரதமரின் ஆலோசகர் விளக்கம்!
ADDED : டிச 12, 2024 12:14 AM

புதுடில்லி, இந்தியாவுக்கு எதிரான கொள்கையுடைய அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரசின் அறக்கட்டளையிடம் இருந்து நிதியுதவி பெற்றதாக காங்கிரஸ் கூறியுள்ள புகாருக்கு, பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினரான பேராசிரியர் ஷமிகா ரவி மறுப்பு தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி - தொழிலதிபர் அதானிக்கு இடையேயான தொடர்பு குறித்த பிரச்னையை, காங்கிரஸ் கட்சி பார்லிமென்டில் தொடர்ந்து எழுப்பி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவுக்கு எதிரான கொள்கை உடைய அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரசின் அறக்கட்டளைக்கும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா அங்கம் வகிக்கும் அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக பா.ஜ., கூறி வருகிறது.
பார்லிமென்டில் இந்த விவகாரம் கடந்த சில நாட்களாக பெரும் அமளியையும், அரசியல் ரீதியில் விவாதத்தையும் உருவாக்கியுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கெரா, புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
'பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினரான பேராசிரியர் ஷமிகா ரவி இந்திய பிசினஸ் பள்ளியில் பணியாற்றியபோது, ஜார்ஜ் சோரஸ் அறக்கட்டளையிடம் இருந்து நிதியுதவி பெற்றார்' என, பவன் கெரா கூறியுள்ளார்.
இதுகுறித்து ஷமிகா ரவி கூறியுள்ளதாவது:
நான், இந்திய பிசினஸ் பள்ளியில் உதவி பேராசிரியராகவும், ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றினேன்.
அந்த, 2006 - 07 காலகட்டத்தில், ஜார்ஜ் சோரசின், 'ஓப்பன் சொசைட்டி' அறக்கட்டளை சார்பில், சில ஆராய்ச்சிக்காக நிதி உதவி வழங்கப்பட்டது. அந்த நிதி நேரடியாக இந்திய பிசினஸ் பள்ளிக்கே கிடைத்தது; அதில் பணியாற்றிய பேராசிரியர்கள் உள்ளிட்ட எவருக்கும் தனிப்பட்ட முறையில் வழங்கப்படவில்லை.
அந்த நேரத்தில், பொதுவான நோக்கத்துடன் ஆராய்ச்சிகளுக்கு நன்கொடைகளை வழங்கி வந்த ஜார்ஜ் சோரஸ், பின்னர் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். இதற்கு யார் காரணம் என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை.
இந்திய பிசினஸ் பள்ளியில் 18 ஆண்டுகள் பணியாற்றிய பிறகே, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இணைந்துஉள்ளேன்.
இத்தனை ஆண்டுகளில் என் செயல்பாடுகள் எதுவும் நாட்டுக்கு எதிராக இருந்ததில்லை. அதனாலேயே, பிரதமரின் ஆலோசனைக்குழுவில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதில் இருந்து பவன் கெரா கூறியுள்ளது முழுக்க முழுக்க உண்மையில்லாதவை என்பது தெளிவாகிறது. மேலும், அவமதிப்பு வழக்கு தொடர்வதற்கு தகுதி பெற்றது.
இவ்வாறு அவர் கூறினார்.