கர்நாடகாவின் 'தண்ணீர் கொம்பன்' யானை கேரள வனத்துறையினர் கொன்றனரா?
கர்நாடகாவின் 'தண்ணீர் கொம்பன்' யானை கேரள வனத்துறையினர் கொன்றனரா?
ADDED : பிப் 04, 2024 06:13 AM

சாம்ராஜ் நகர், : ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானையை கேரள வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திக் கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஹாசன் பேலுார் பிக்கோடு கிராமத்தில் உள்ள, காபி தோட்டங்களில் அட்டகாசம் செய்த காட்டு யானையை, கும்கிகள் உதவியுடன் கடந்த மாதம் 16ம் தேதி, வனத்துறையினர் பிடித்தனர். சாம்ராஜ்நகர் பண்டிப்பூர் கொண்டு சென்று, யானைக்கு ரேடியோ காலர் பொருத்தினர். பின்னர் பண்டிப்பூர் வனப்பகுதியில் யானையை விட்டனர்.
இந்த யானை, கர்நாடகாவில் இருந்து இடம்பெயர்ந்து, கேரளாவின் வயநாடு மானந்தவாடிக்குச் சென்றது. நேற்று முன்தினம் காலையில் மானந்தவாடி நகரில் உலா வந்தது. தண்ணீரைத் தேடி, தேடி சென்று குடித்ததால், அந்த யானைக்கு கேரள மக்கள், 'தண்ணீர் கொம்பன்' என்று பெயர் வைத்தனர்.
நேற்று முன்தினம் மாலை, அந்த யானையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். துப்பாக்கி மூலம் இரண்டு முறை, யானையின் மீது மயக்க ஊசி செலுத்தியதாக கூறப்படுகிறது. மயங்கிய யானையை உடனடியாக மீட்காமல், இரவில் தான் மீட்டு லாரியில் ஏற்றி உள்ளனர்.
பண்டிப்பூர் வன அதிகாரிகளை தொடர்பு கொண்டு, 'உங்கள் மாநிலத்தில் இருந்து தான் யானை வந்து உள்ளது. அங்கு கொண்டு வருகிறோம்' என்று கூறி உள்ளனர். நேற்று அதிகாலை பண்டிப்பூர் அருகே, ராம்பூர் யானைகள் முகாமிற்கு கொண்டு வந்து உள்ளனர். சிறிது நேரத்தில் அந்த யானை இறந்தது. யானையின் இறப்புக்கு காரணம் தெரியவில்லை.
இரண்டு முறை மயக்க ஊசி செலுத்தி, யானையைக் கொன்றதாக, கேரள வனத்துறையினர் மீது, வனவிலங்கு ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இரு மாநில வன அதிகாரிகள் முன்னிலையில், யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.