ADDED : அக் 16, 2024 02:31 AM
ஆமதாபாத், ஆன்லைன் வாயிலாக அழைத்து, 'டிஜிட்டல்' முறையில் கைது செய்யப் போவதாக மிரட்டி மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த, 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், நான்கு பேர் தைவானைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் இருந்து, 120 மொபைல் போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சமீபகாலமாக நடந்துவரும் மோசடிகளில் ஒன்று, டிஜிட்டல் முறையில் கைது செய்யப் போவதாக மிரட்டி பணம் பறிப்பதாகும்.
இதன்படி ஒருவரை, மர்ம நபர்கள் மொபைல் போனில் அழைத்து, சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித் துறை போன்ற விசாரணை அமைப்பில் இருந்து அழைப்பதாக கூறுவர்.
மோசடி ஒன்றில் அவர் சிக்கியிருப்பதாகக் கூறி மிரட்டுவர். தொடர்ந்து, வீடியோ அழைப்பில் இருக்கும்படி கூறி, அவரிடம் விசாரணை நடத்துவர்.
இந்த மோசடியில் இருந்து விடுபட, குறிப்பிட்டத் தொகையை, அவர்கள் கூறும் வங்கிக் கணக்கில் செலுத்தும்படி கூறுவர்.
இந்த வகையில், நாடு முழுதும் பலரிடம் மோசடி செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதில், ஒரு வயதானவரிடம், 10 நாட்கள் வீடியோ அழைப்பில் இருக்க வைத்து விசாரித்துள்ளனர்.
பண பரிமாற்றம்
இது தொடர்பான புகார்கள் குறித்து, குஜராத் ஆமதாபாதின் சைபர் குற்றப்பிரிவு விசாரித்து வந்தது. அந்த விசாரணையின் தொடர்ச்சியாக, 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், நான்கு பேர் ஆசிய நாடான தைவானைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள், இந்த மோசடி செய்வதற்கென தனியாக மொபைல்போன் செயலியை உருவாக்கியுள்ளனர். அதன் வாயிலாக, வீடியோ அழைப்பு செய்வது, பணப் பரிமாற்றம் போன்றவற்றை செய்துள்ளனர்.
மேலும், விசாரணை அமைப்புகளின் பெயரில், டிஜிட்டல் கைது வாரன்ட், பணம் பெற்றதற்கான ரசீது போன்றவற்றையும் வினியோகித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மற்றவர்கள், குஜராத், ராஜஸ்தான், டில்லி, ஒடிசா, கர்நாடகா, மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள்.
இந்த மோசடி செய்வதற்காக தனியாக, கால் சென்டரையும் நடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து விசாரணை
இதுவரை, 1,000க்கும் மேற்பட்டோரிடம் இந்த கும்பல் கைவரிசை காட்டியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துஉள்ளது.
அவர்களிடம் இருந்து, 12.75 லட்சம் ரூபாய் ரொக்கம், 761 சிம் கார்டுகள், 120 மொபைல் போன்கள், 96 செக் புக், 92 டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், 42 பாஸ்புக் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.