ADDED : அக் 05, 2024 11:07 PM

பெங்களூரு: தன்னை பற்றியும், தன் மதம் பற்றியும் அவதுாறாக பேசி வரும் பா.ஜ.,வினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கர்நாடக மாநில மகளிர் ஆணையத்தில், அமைச்சர் தினேஷ் குண்டுராவ் மனைவி தபசும் ராவ் புகார் செய்துள்ளார்.
பெங்களூரில் காந்தி ஜெயந்தியன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், 'விநாயக் தாமோதர் சாவர்க்கர், மாட்டிறைச்சி சாப்பிட்டவர்' என்று பேசியிருந்தார்.
இதற்கு பா.ஜ., உட்பட பல ஹிந்து அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
இதற்கு எதிராக கர்நாடக மாநில பா.ஜ.,வின் 'எக்ஸ்' சமூக வலைதளத்தில், 'வீர் சாவர்க்கர் மாட்டிறைச்சி சாப்பிட்டார் என்று உங்களின் தந்தை குண்டுராவ் சொன்னாரா அல்லது முஸ்லிமான உங்கள் மனைவி தபசும் சொல்லிக் கொடுத்தாரா?' என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதுதொடர்பாக கர்நாடக மாநில பெண்கள் ஆணையத்தில், தபசும் அளித்த புகாரில் குறிப்பிட்டு உள்ளதாவது:
பா.ஜ.,வின் 'எக்ஸ்' சமூக வலைதளத்தை கையாளுபவர்கள், என்னை பற்றியும், எனது மதம் குறித்தும் அவ்வப்போது அவதுாறு பரப்பி வருகின்றனர். அமைச்சர் தினேஷ் குண்டுராவின் மனைவி என்பதால், என் மீது அவதுாறு பரப்புகின்றனர்.
ஏற்கனவே பா.ஜ.,வின் பசனகவுடா பாட்டீல் எத்னால் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளேன். இத்தகைய செயல், பா.ஜ.,வுக்கும், அதன் தலைவர்களுக்கும் வாடிக்கையாகிவிட்டது.
அரசியல் ஆதாயத்துக்காக, என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேச்சு எழுகிறது. அரசியல்வாதியின் குடும்ப உறுப்பினர் என்பதற்காக தொடர்ந்து தாக்கிப் பேசுவது ஏற்புடையதல்ல. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.