டில்லியில் இருந்து கிரீஸ் நாட்டுக்கு நேரடி விமானம்
டில்லியில் இருந்து கிரீஸ் நாட்டுக்கு நேரடி விமானம்
ADDED : செப் 17, 2025 03:06 AM

மும்பை: டில்லி, மும்பையில் இருந்து ஐரோப்பிய நாடான கிரீஸுக்கு நேரடி விமான சேவையை, இண்டிகோ நிறுவனம் அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்க உள்ளது.
இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு, வர்த்தகம் மற்றும் சுற்றுலா செல்லும் பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் அந்நாடுகளுக்கு விமான சேவையை நீட்டிப்பதில் நம் விமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்நிலையில், இண்டிகோ விமானம் மும்பை மற்றும் டில்லியில் இருந்து வாரத்திற்கு மூன்று நாட்கள் கிரீஸ் நாட்டின் ஏதன்ஸ் நகருக்கு நேரடி விமான சேவையை துவங்க உள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
'ஏர்பஸ் ஏ321-எக்ஸ்.எல்.ஆர்.,' என்ற நவீன விமானத்தை இந்தியாவில் முதன் முறையாக இண்டிகோ வாங்க உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் அந்த விமானத்தை சொந்தமாக்குவோம்.
இந்த விமானம், நீண்ட துார பயணங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வரம்பு 8,700 கி.மீ., ஆக உள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரியில், 'ஏர்பஸ்' விமானத்தை பயன்படுத்தி கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதன்ஸுக்கு நேரடி விமான சேவையை துவங்க உள்ளோம். அதற்கான அனுமதி கோரி விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளரிடம் விண்ணப்பித்துள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.