ADDED : அக் 19, 2024 12:33 AM
புதுடில்லி: வழக்கறிஞர் ஷஷாங்க் சேகர் ஜா என்பவர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு:
ஓ.டி.டி., தளங்களில், உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது எனக்கூறி, சில திரைப்படங்களில் சர்ச்சைக்குரிய, உண்மைக்கு புறம்பான காட்சிகள் இடம் பெறுகின்றன.
இதனால் பார்வையாளர்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர்.
எனவே, ஓ.டி.டி.,யில் வெளியாகும் திரைப்படங்களை தணிக்கை செய்யவும், கண்காணிக்கவும், ஒழுங்குபடுத்தவும் தன்னாட்சி அமைப்பை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த மனு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அமர்வு உத்தரவிட்டதாவது:
பொதுநல மனுக்களின் பிரச்னையே இதுதான். அவை எப்போதும் அரசின் கொள்கை விஷயங்களை சார்ந்தவையாகவே இருக்கின்றன.
இதனால் உண்மையான பொதுநல மனுக்களை நாம் இழக்கிறோம். இந்த விவகாரம், அரசின் கொள்கை சார்ந்தது. இதில், நீதிமன்றம் தலையிட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.

