பேனர் வைப்பதில் தகராறு காங்., தொண்டர் சுட்டுக்கொலை
பேனர் வைப்பதில் தகராறு காங்., தொண்டர் சுட்டுக்கொலை
ADDED : ஜன 02, 2026 01:58 AM

பல்லாரி: முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கும் கர்நாடகாவில், வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு, பல்லாரி மாவட்டத்தில் உள்ள பா.ஜ., ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ., ஜனார்த்தன ரெட்டி வீட்டின் முன், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., பரத் ரெட்டியின் ஆதரவாளர்கள் நேற்றிரவு பேனர் வைக்க முயன்றனர்.
இதற்கு ஜனார்த்தன ரெட்டியின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. கற்களை வீசி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். ஜனார்த்தன ரெட்டி வீட்டின் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
அவரது நெருங்கிய நண்பரான முன்னாள் அமைச்சர் சதீஷ் ரெட்டி சம்பவ இடத்துக்கு வந்தார். அப்போது, அவரது பாதுகாவலர்களில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில், காங்., தொண்டர் ராஜசேகர் என்பவர் உயிரிழந்தார்.
தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து நிலைமையை கட்டுப்படுத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

