சமுதாய கூடம் கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் அதிருப்தி
சமுதாய கூடம் கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் அதிருப்தி
ADDED : அக் 15, 2024 12:13 AM

- நமது நிருபர் -
துப்புரவு பணியாளர்கள் நிறைந்த, ராபர்ட்சன்பேட்டை 2வது பிளாக், 6வது கிராஸ் பகுதியில் சமுதாய கூடம் கட்டும் பணிகள் மூன்று ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. நகராட்சியின் பால்காரர் வார்டில் 3,000 பேர் உள்ளனர். 6வது கிராசில் பெரும்பான்மையாக இந்நாள், முன்னாள் நகராட்சி துப்புரவு பணியாளர்களின் குடும்பங்களும், பட்டியல் வகுப்பினரும் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள மாரியம்மன் கோவில் அருகே, நகராட்சிக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய, பல ஆண்டுகளாக முயற்சி நடக்கிறது.
ஆனால், அங்கு ஒரு சமுதாய கூடம் கட்ட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கனவாக உள்ளது.
பா.ஜ.,வின் கவுன்சிலராக ராமக்கா தேர்வானதும், இந்த இடத்தில் சமுதாய கூடம் கட்ட வேண்டும் என்று ஆர்வம் காட்டினார். இதனால், 30 க்கு 50 அடி அளவில் இரண்டு அடுக்கு சமுதாய கூடம் கட்ட, 2021ல் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கின.
60 சதவீதம்
இதற்காக, 2021- - 2022ல் நகராட்சியில் 25 லட்சம் ரூபாய் நிதியும்; 2022- - 2023ல் 15 லட்சம் ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆயினும் பணிகள், 60 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளது. இன்னும் 40 சதவீத பணிகள் மேற்கொள்ள வேண்டும். இன்னும் 40 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் நடக்க வேண்டும். நகராட்சி கூட்டம், கடந்த 16 மாதங்களாக நடக்காததால், எடுத்து சொல்ல முடியவில்லை. அதிகாரிகளும் கவனம் செலுத்தவில்லை.
இதுகுறித்து பால்காரர் வார்டு பா.ஜ., கவுன்சிலர் ரமலம்மா கூறியதாவது:
என் கணவர் கண்ட்லப்பா, நகராட்சியில் 30 ஆண்டுகளாக துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இரண்டாவது பிளாக் பகுதியில், பெரும்பாலும் துப்புரவு பணியாளர்கள் குடும்பத்தினரே வசித்து வருகின்றனர்.
துப்புரவு பணியாளர் குடும்பத்தினர் வைபவங்களுக்கு, சமுதாய கூடம் அவசியம் தேவை என்பதால், 2021ல் சமுதாய கூடம் கட்டும் பணியை துவக்கினோம்.
இன்னும் முடிந்தபாடில்லை. தேவையான நிதியை வழங்கி விரைந்து முடிக்க மாவட்ட கலெக்டரிடம் கோரினோம்; பயன் இல்லை.
நகராட்சியின் மொத்த வருமானத்தில் 18 சதவீத நிதி எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினரின் நலனுக்காக ஒதுக்கப்படுகிறது. அந்த தொகையிலாவது விரைந்து முடிக்கலாம்.
சமுதாய கூடம் எதிரில் 100 மீட்டர் சிமென்ட் சாலை அமைக்க, 'நகரோத்னா' திட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அந்த சாலைப் பணியையும் மேற்கொள்ளவில்லை. நகராட்சி கூட்டம் நடந்தால் தான் இப்பிரச்னைக்கு முடிவு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

