ஸோகோவுக்கு மாறியது மத்திய அரசின் 12.68 லட்சம் இமெயில் கணக்குகள்
ஸோகோவுக்கு மாறியது மத்திய அரசின் 12.68 லட்சம் இமெயில் கணக்குகள்
UPDATED : டிச 11, 2025 09:06 PM
ADDED : டிச 11, 2025 08:59 PM

புதுடில்லி: மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த சுமார் 12.68 லட்சம் இமெயில் கணக்குகள் ஸோகோ நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக லோக்சபாவில் திரிணமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாதா எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: நாடு முழுவதும் மொத்தம் 50.14 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். பல்வேறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளை சேர்ந்த 12.68 லட்சம் அதிகாரப்பூர்வ இமெயில் கணக்குகள் ஸோகோவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதில் 7.57 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு சொந்தமானவை.
இந்த முக்கிய மின்னஞ்சல் கணக்குகள் மாற்றம் செயல்பாடு, தேசிய தகவல் மையம்( என்ஐசி) வழியாகவே மேற்கொள்ளப்பட்டது. அந்த நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி, இந்த செயல்முறையின் மூலம் உருவாக்கப்படும் அனைத்து தரவுகளின் மற்றும் அறிவுசார் சொத்துரிமையின் உரிமை அரசுக்கே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 2023ம் ஆண்டு, என்ஐசி இமெயில் அமைப்பில் இருந்து பாதுகாப்பான கிளவுட் அமைப்பு தளத்துக்கு அரசின் கணக்குகளை மாற்றுவதற்காக மத்திய அரசு டெண்டர் வெளியிட்டது. இதனை ஸோகோ நிறுவனம் கைப்பற்றியது. ஆனால், மென்பொருள் லைசென்ஸ் கட்டமைப்பு, பயிற்சி உள்ளிட்டவற்றுக்கு ஆகும் செலவு குறித்த விவரத்தை ஜிதின் பிரசாதா வெளியிடவில்லை.

