மீனவர் நிகழ்ச்சியில் பங்கேற்காத மங்கள் வைத்யா மீது அதிருப்தி
மீனவர் நிகழ்ச்சியில் பங்கேற்காத மங்கள் வைத்யா மீது அதிருப்தி
ADDED : டிச 09, 2024 06:53 AM

பெங்களூரு: காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த மீனவர் தின நிகழ்ச்சியில் பங்கேற்காத மீன்வளத்துறை அமைச்சர் மங்கள் வைத்யா மீது, அதிருப்தி எழுந்துள்ளது.
பெங்களூரின், குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில், நேற்று முன்தினம் உலக மீனவர் தினம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்கும்படி மீன் வளத்துறை அமைச்சர் மங்கள் வைத்யாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் பெங்களூரிலேயே இருந்தும், நிகழ்ச்சிக்கு அவர் வரவில்லை. இதனால் காங்கிரஸ் நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
இது குறித்து, மாநில காங்கிரஸ் செயலர் சந்திரசேகர் கூறியதாவது:
மீனவர் தின நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி முதல்வர், துணை முதல்வர், மீன் வளத்துறை அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
தவிர்க்க முடியாத காரணங்களால் முதல்வர், துணை முதல்வரால் நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை. ஆனால் மீன்வளத்துறை அமைச்சர் மங்கள் வைத்யா வந்திருக்க வேண்டும்.
அவர் நிகழ்ச்சியில் பங்கேற்று, மீனவர்களின் பிரச்னைகளை கேட்டிருக்க வேண்டும். பெங்களூரிலேயே இருந்தும் அவர் வரவில்லை. இதை விட முக்கியமான நிகழ்ச்சி வேறு என்ன இருந்தது என, தெரியவில்லை. கட்சி மற்றும் தொண்டர்களை விட, வேறு எதுவும் முக்கியம் அல்ல.
நிகழ்ச்சிக்கு வராத அமைச்சரின் செயல், எங்களுக்கு அதிருப்தி அளித்துள்ளது. தொண்டர்கள் மற்றும் கட்சிக்கு மதிப்பளிக்காதவர்கள், தலைவராவதற்கு லாயக்கு இல்லை. அமைச்சர் மங்கள் வைத்யா மீது, மேலிடத்திடம் புகார் அளிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.