ஆந்திராவில் வறுமை ஒழிப்பு நடவடிக்கை தனியார் தலையில் கட்டுவதால் அதிருப்தி
ஆந்திராவில் வறுமை ஒழிப்பு நடவடிக்கை தனியார் தலையில் கட்டுவதால் அதிருப்தி
ADDED : ஆக 20, 2025 02:57 AM

ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் - ஜனசேனா - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த சட்டசபை தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை, முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். சமீபத்தில், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச சேவை திட்டம் துவங்கப்பட்டது.
தங்கக் குடும்பங்கள் புதுமையான திட்டங்களுக்கு பெயர் பெற்ற முதல்வர் சந்திரபாபு நாயுடு, 'பி 4' என்ற திட்டத்தை துவங்கி உள்ளார்.
'அரசு, தனியார், மக்கள், கூட்டாண்மை' ஆகியவற்றை இத்திட்டம் குறிப்பிடுகிறது.
அரசு, தனியார் துறை மற்றும் பொதுமக்களிடையே ஒருங்கிணைந்த ஈடுபாட்டின் மூலம் வறுமையை எதிர்த்துப் போராடுவதே இத்திட்டத்தின் நோக்கம்.
இத்திட்டத்தின் தலைவராக முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணைத் தலைவராக, ஜனசேனா தலைவரும், துணை முதல்வருமான பவன் கல்யாண் உள்ளனர்.
'தங்கக் குடும்பங்கள்' என அழைக்கப்படும் இத்திட்டம், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மக்களை, பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதை இலக்காக வைத்துள்ளது.
இத்திட்டத்தின்படி பணக்காரர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர், எந்த நிபந்தனையுமின்றி வழிகாட்டிகளாக இருக்கலாம்.
இவர்கள், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களை தத்தெடுக்கலாம். இதற்கு அரசு ஒரு பாலமாக செயல்படும். ஆனால், நிதி எதுவும் ஒதுக்காது.
இது தொடர்பாக, பல்வேறு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார். அப்போது, ஏழை குடும்பங்களை தத்தெடுத்து மேம்படுத்தும்படி அவர் வலியுறுத்தினார்.
அறிவுறுத்தல் சித்துார் மாவட்டத்தின் தன் சொந்த தொகுதியான குப்பம் தொகுதியில், 250 குடும்பங்களை முதல்வர் சந்திரபாபு நாயுடு தத்தெடுத்துள்ளார்.
இதேபோல், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோரும், ஏழை குடும்பங்களை தத்தெடுக்க வேண்டும் என, அவர் அறிவுறுத்தி உள்ளார்.
அரசு தரவுகளின்படி, இம்மாத துவக்கம் வரை 10 லட்சம் குடும்பங்கள் தத்தெடுக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் சில நிறுவனங்களின் தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏழை குடும்பங்களை தத்தெடுக்கும்படி, முதல்வர் பெயரை சொல்லி வற்புறுத்துவதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே, கார்ப்பரேட் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், பல்வேறு நலத்திட்டங்களுக்கு நிதியுதவி அளித்து வரும் நிலையில், தற்போது, பி 4 திட்டத்துக்காக நிதி செலவிட வேண்டும் என, அரசு தரப்பில் மறைமுகமாக வற்புறுத்தப்படுவதாக அவர்கள் கருதுகின்றனர்.
இத்திட்டத்துக்கு செலவு செய்தால், கார்ப்பரேட் சமூக பொறுப்பு திட்டத்தின் நிதி குறையும் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
வேலைவாய்ப்பு இது குறித்து, அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், 'வறுமை ஒழிப்பை ஆந்திர அரசு தனியார்மயமாக்குகிறது.
'அரசு நேரடியாக நிதி அளிக்காமல், தனியார் துறையை நிதி அளிக்கும்படி கட்டாயப் படுத்துகிறது.
'வறுமை ஒழிப்புக்கு குடும்பங்களை தத்தெடுப்பது மட்டும் போதாது. வேலைவாய்ப்பு உருவாக்கம், திறன் மேம்பாடு, நில சீர்திருத்தங்கள் போன்ற நட வடிக்கைகள் தேவை' என்றனர்.
- நமது சிறப்பு நிருபர் -