ADDED : அக் 21, 2024 12:14 AM
ஹாவேரி : ஷிகாவி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், பரத் பொம்மைக்கு சீட் அறிவித்ததால், பா.ஜ.,வில் அதிருப்தி வெடித்து உள்ளது. தொகுதியில் தொண்டர்கள் இல்லையா என, கேள்வி எழுப்புகின்றனர்.
ஹாவேரியின், ஷிகாவி தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ.,வாக இருந்த பசவராஜ் பொம்மை, லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.,யானார். எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். இந்த தொகுதி உட்பட சென்னப்பட்டணா, சண்டூர் தொகுதிகளுக்கு நவம்பர் 13ல் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.
சண்டூருக்கு பங்காரு ஹனுமந்து, ஷிகாவிக்கு பரத் பொம்மை பா.ஜ., வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். சென்னப்பட்டணாவுக்கு இன்னும் வேட்பாளர் அறிவிக்கவில்லை. ஷிகாவி தொகுதி வேட்பாளர் விஷயத்தில், கட்சியில் அதிருப்தி வெடித்து உள்ளது.
காங்கிரசின் குடும்ப அரசியல் குறித்து, பா.ஜ.,வின் மேலிட தலைவர்கள் விமர்சிக்கின்றனர். ஆனால் கர்நாடகாவில் மட்டும், பா.ஜ., தலைவர்களின் பிள்ளைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர் என, பலரும் குற்றம் சாட்டுகின்றனர். சமூக வலைதளம் வழியாக, தங்களின் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்.
'ஷிகாவியில் அப்பா, மகனை விட்டால் கட்சியில் வேறு தொண்டர்கள் இல்லையா. இதுதானா பிரதமர் மோடியின் கனவு. சென்னப் பட்டணாவில் யோகேஸ்வருக்கு சீட் தாருங்கள். கட்சிக்காக உழைத்தவர்களுக்கு முக்கியத்துவம் தாருங்கள். கவுரவ பிரச்னையை ஓரங்கட்டுங்கள்.
'பசவராஜ் பொம்மை, அவரது மகன் பரத்பொம்மை என, அவரது குடும்பத்தினர் அரசியல் செய்கின்றனர். கட்சிக்காக இரவு, பகல் பாராமல் உழைத்த தொண்டர்கள், கோஷம் போட்டுக் கொண்டே இருக்க வேண்டுமா' என, கேள்வி எழுப்பி உள்ளனர்.

