நாடு முழுதும் தீபாவளி பண்டிகை வர்த்தகம் ரூ.5.40 லட்சம் கோடி! சேவை துறையில் கொட்டியது ரூ.65,000 கோடி
நாடு முழுதும் தீபாவளி பண்டிகை வர்த்தகம் ரூ.5.40 லட்சம் கோடி! சேவை துறையில் கொட்டியது ரூ.65,000 கோடி
UPDATED : அக் 23, 2025 05:54 AM
ADDED : அக் 22, 2025 11:47 PM

புதுடில்லி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுதும் 5.40 லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்திருப்பதாக அகில இந்திய வர்த்தகர்கள் சம்மேளனம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், போக்குவரத்து உள்ளிட்ட சேவை துறைகள் மூலம் 65,000 கோடி ரூபாய்க்கு வருவாய் கிடைத்திருப்பதாக அறிவித்துள்ளது.
நவராத்திரி முதல் நாளில் இருந்து ஜி.எஸ்.டி., விகிதங்கள் குறைக்கப்பட்டு, புதிய சீர்திருத்தங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதனால், பெரும்பாலான பொருட்களின் விலை குறைந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு நாடு முழுதும் விற்பனை களைகட்டியது.
குறிப்பாக சீனப் பொருட்கள் வாங்குவதை தவிர்த்த பொதுமக்கள், சுதேசி பொருட்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்திருப்பதாக அகில இந்திய வர்த்தகர்கள் சம்மேளனம் தெரிவித்துஉள்ளது.
இது குறித்து, வர்த்தகர்கள் சம்மேளனம் வெளியிட்ட அறிக்கை:
முந்தைய ஆண்டுகளை விட, இந்த ஆண்டு தீபாவளிக்கு பல்வேறு பொருட்களின் விற்பனை அமோகமாக நடந்துள்ளன.
கடந்த 2024 தீபாவளி பண்டிகையின்போது, 4.25 லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்திருந்தது. ஆனால், இந்த ஆண்டு அந்த சாதனை முறியடிக்கப்பட்டு, 5.40 லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது.
மெட்ரோபாலிட்டன் நகரங்களில் பொருட்களின் விற்பனை கணிசமாக அதிகரித்ததே இதற்கு காரணம். தங்க நகைகள், எலெக்ட்ரானிக் பொருட்கள், ஜவுளிகள், வீட்டு அலங்கார பொருட்கள், உணவுப் பொருட்கள் என அனைத்துமே இந்த ஆண்டு அதிக அளவில் விற்பனையாகி உள்ளன.
இந்திய பொருட்களை வாங்க வேண்டும் என்ற பிரசாரத்தை நுகர்வோர் ஏற்றுக் கொண்டனர். இதனால், 1.25 லட்சம் கோடி ரூபாய்க்கு சீனப் பொருட்கள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்தன. வர்த்தகர்களும் சுதேசி பொருட்களுக்கு ஆதரவு அளித்ததே இதற்கு முக்கிய காரணம்.
தங்க ஆபரணங்களை பொறுத்தவரை இந்த ஆண்டு, 20,000 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. வெள்ளி பொருட்களின் விற்பனை, 2,500 கோடி ரூபாயாக அதிகரித்தது.
மேலும், போக்குவரத்து உள்ளிட்ட சேவை துறைகள் வாயிலாக, 65,000 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
பண்டிகை காலங்களில் பிராந்திய கைவினை பொருட்களும் அதிக அளவில் விற்பனையாகியுள்ளன. பர்னிச்சர், வீட்டு அலங்கார பொருட்கள், சமையல் பாத்திரங்கள் வாங்குவதற்கும் நுகர்வோர் அதிக ஆர்வம் காட்டினர்.
இந்திய கைவினை பொருட்களுக்கும் நுகர்வோர் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருவதால், சிறு வணிகர்கள், கைவினை கலைஞர்களும் பலன் பெற்று வருகின்றனர். குறிப்பாக அகல் விளக்கு தயாரிக்கும் குயவர்களும், உள்ளூர் சிறுதொழில் முனைவோருக்கும் இந்த ஆண்டு தீபாவளி மகிழ்ச்சியாக அமைந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் மத்தியில் நுகர்வு திறன் அதிகரித்திருக்கும் சூழலில், அடுத்து வரும் மாதங்களில் அதிக அளவில் திருமணங்கள் நடக்கும் என்பதால், தள்ளுபடி, சலுகை என கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு, விற்பனையை அதிகரிக்க வர்த்தகர்களும் மும்முரம் காட்டி வருகின்றனர்.