கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் அரசியல் வாழ்க்கை முடிகிறதா? மகன் கருத்தால் சலசலப்பு
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் அரசியல் வாழ்க்கை முடிகிறதா? மகன் கருத்தால் சலசலப்பு
UPDATED : அக் 23, 2025 06:40 AM
ADDED : அக் 22, 2025 11:49 PM

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திரா, தன் தந்தையின் அரசியல் பயணம் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், அவரின் பாரம்பரியத்தை தொடர சிறந்த நபராக காங்கிரஸ் தலைவர் சதீஷ் ஜர்கிஹோலி இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு துணை முதல்வராக சிவகுமார் உள்ளார். தற்போது காங்கிரஸ் அரசு இரண்டரை ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது.
தேர்தலுக்கு முன் சித்தராமையா மற்றும் சிவகுமார் இடையே முதல்வர் பதவியை இரண்டரை ஆண்டுகளுக்கு பகிர்ந்துகொள்வதாக ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
ஆனால் முதல்வர் சித்தராமையா கடந்த மாதம் அளித்த பேட்டியில், 'நான் முழு 5 ஆண்டு காலம் முதல்வராக இருப்பேன்.இன்னும் இரண்டரை ஆண்டுகள் தொடர்வேன்' என்றார்.
அதே சமயம் காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சிவராமே கவுடா, 'சிவகுமார் நவம்பரில், 100 சதவீதம் முதல்வர் ஆவார்' என்றார்.
'இது குறித்து காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யும்' என, சிவகுமார் பதிலளித்தார்.
இந்நிலையில், முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திரா, 'என் தந்தை அரசியல் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் உள்ளார். இன்று கொள்கை பற்றுடையவர்களை காண்பது அரிது. ஆனால் சதீஷ் ஜர்கிஹோலி போன்ற முற்போக்கு தலைவர், அப்பாவின் பணியை தொடர முடியும்' என்றார்.
இது கர்நாடக அரசியலில் சர்ச்சையை கிளப்பியது. முதல்வர் மாற்றப்படப்போவதாக தகவல் பரவியது. அதன் பின் தன் கருத்துக்கு யதீந்திரா விளக்கம் அளித்தார்.
அதில், 'கர்நாடக அரசில் தலைமையில் மாற்றம் இல்லை. எங்கள் கட்சி மேலிடம் இதைத் தெளிவாக கூறிவிட்டது. இது பா.ஜ.,வின் வதந்தி' என்றார்.
சித்தராமையாவின் மகன் யதீந்திரா, சதீஷ் ஜர்கிஹோலியை பரிந்துரைத்தது குறித்து துணை முதல்வர் சிவகுமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
'இது குறித்து அவரிடமே கேளுங்கள். நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது. கட்சியினுள் கோஷ்டி அரசியலை அனுமதிக்க மாட்டேன். நான் விரும்பியிருந்தால் கோஷ்டி அரசியலில் ஈடுபட்டு என்ன வேண்டுமானாலும் செய்து இருக்கலாம்' என்றார்.