கர்நாடக முதல்வர் மாற்றம் குறித்து மீண்டும் பேசுவது நல்லதல்ல; யூகங்களுக்கு டி.கே. சிவகுமார் முற்றுப்புள்ளி
கர்நாடக முதல்வர் மாற்றம் குறித்து மீண்டும் பேசுவது நல்லதல்ல; யூகங்களுக்கு டி.கே. சிவகுமார் முற்றுப்புள்ளி
ADDED : ஜூலை 11, 2025 03:20 PM

பெங்களூரு; கர்நாடக முதல்வர் மாற்றம் குறித்து மீண்டும், மீண்டும் பேசுவது நல்லதல்ல, முதல்வராக சித்தராமையா தொடர்வார் என்று துணை முதல்வர் டி.கே. சிவகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையாவை மாற்றிவிட்டு, டி.கே. சிவகுமார் முதல்வராக பதவியேற்பார் என பலமான விவாதங்கள் எழுந்தன. சிவகுமாருக்கு ஆதரவு தெரிவித்து பல எம்.எல்.ஏ.,க்களும் குரல் எழுப்பியதால் கர்நாடக அரசியலில் திடீர் சலசலப்பு உருவானது.
ஆனால் நான் 5 ஆண்டுகள் முதல்வராக இருப்பேன் என்று சித்தராமையா திட்டவட்டமாக கூறிவிட்டார். மழை விட்டும், தூறல் விடாதது போல, மீண்டும் அவர் மாற்றப்படுகிறார் என்ற ஹேஸ்யங்கள் எழுந்தன.
இதுகுறித்து நிருபர்கள் துணை முதல்வர் சிவகுமாரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது;
முதல்வராக சித்தராமையாவே தொடர்வார் என்று மாநில பொறுப்பாளர் ரன்தீப் கர்ஜேவாலா தெரிவித்துவிட்டார். சித்தராமையாவும் தெளிவுப்படுத்திவிட்டார். இந்த விவகாரத்தில் ஒரு பதில் வழங்கிவிட்ட பின்னர், மீண்டும், மீண்டும் அதை பற்றியே பேசுவது நல்லதல்ல.
சிலரிடம் இருந்து சில அறிக்கைகள் எனக்கு ஆதரவாக வரலாம். அது பற்றி இப்போது கருத்து தெரிவிப்பது தேவையற்றது.
இவ்வாறு சிவகுமார் கூறினார்.

