திமுக எம்.பி., ஆ.ராசா மக்களால் அடக்கப்படுவார்: இ.பி.எஸ்
திமுக எம்.பி., ஆ.ராசா மக்களால் அடக்கப்படுவார்: இ.பி.எஸ்
UPDATED : பிப் 09, 2024 01:44 PM
ADDED : பிப் 09, 2024 01:37 PM

அவிநாசி : ‛‛ எம்.ஜி.ஆர்., குறித்து அவதூறாக பேசிய தி.மு.க., எம்.பி., ஆ.ராசா மக்களால் அடக்கப்படுவார்''என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பேசினார்.
அ.தி.மு.க., நிறுவனர் எம்.ஜி.ஆர்., குறித்து அவதூறாக பேசிய தி.மு.க., எம்.பி., ஆ.ராசாவை கண்டித்து திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் மேற்கு ரத வீதியில் அக்கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்பாட்டத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ் பேசியதாவது: பொறாமையில், எம்ஜிஆர்., குறித்து அவதூறாக ஆ.ராசா பேசுகிறார். அ.தி.மு.க., கட்சி வளர்ச்சி பொறுக்காமல் பேசுகின்றனர். இவர்கள் நாட்டிலிருந்து அகற்றப்பட வேண்டும். வீட்டுக்கு அடங்காத பிள்ளை ஊருக்கு அடங்கும் என்பார்கள். அப்படி ராசா மக்களால் அடக்கப்படுவார். மக்கள் வெகுண்டெழுந்தால் ராசா தாக்குப்பிடிப்பாரா என எண்ணிக் கொள்ள வேண்டும்.
ராசா எப்படிப்பட்டவர் என மக்களுக்கு தெரியும். ஆட்டாமலேயே கொடி காற்றில் பறப்பதற்கு காற்று தான் காரணம், ஆனால், கண்ணுக்குத் தெரியாத காற்றில் ஊழல் செய்த ராசா எங்கள் தலைவரை பேசுவதா?. யாகாவாராயினும் நா காக்க என்ற குறளுக்கு ஏற்ப நாவடக்க வேண்டும். வரும் தேர்தலில் நீலகிரி தொகுதியில் எம்ஜிஆர்.,ஐ அவதூறாக பேசிய ராசா டெபாசிட் இழக்க வேண்டும். அதற்கு இதுதான் தண்டனை என இந்த நாட்டிற்கு உணர்த்த வேண்டும். இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.

