sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மீனவர் பிரச்னையை முன் வைத்து தி.மு.க., வெளிநடப்பு

/

மீனவர் பிரச்னையை முன் வைத்து தி.மு.க., வெளிநடப்பு

மீனவர் பிரச்னையை முன் வைத்து தி.மு.க., வெளிநடப்பு

மீனவர் பிரச்னையை முன் வைத்து தி.மு.க., வெளிநடப்பு


UPDATED : பிப் 11, 2024 04:36 AM

ADDED : பிப் 10, 2024 11:13 PM

Google News

UPDATED : பிப் 11, 2024 04:36 AM ADDED : பிப் 10, 2024 11:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பார்லிமென்டில் ராமர் கோவில் திறப்பு குறித்த விவாதம் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், அதில் தி.மு.க., - எம்.பி.,க் கள் பங்கேற்கவில்லை. தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தை மையமாக வைத்து கோஷங்கள் எழுப்பி விட்டு லோக்சபாவிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று காலையில் சபை அலுவல்கள் துவங்கியதுமே, தி.மு.க., - எம்.பி.,க்கள் அனைவரும் சேர்ந்து ஆவேசமாக குரல் எழுப்பத் துவங்கினர்.பொதுவாக டி.ஆர்.பாலு மட்டுமே எழுந்து பேச அனுமதி கேட்டு நிற்பார். அனுமதி கிடைத்தால் பேசுவார். இல்லையெனில், அதன்பின் மற்ற எம்.பி.,க் களும் சேர்ந்து குரல் எழுப்புவர்.

ஆனால், நேற்று அவர்களது வேகமும், காட்சிகளும் வழக்கத்துக்கு மாறாக இருந்தன. பாலு மட்டுமல்லாது, அனைவருமே எடுத்த எடுப்பிலேயே சபையின் முன்வரிசைக்கு வந்து கோஷங்கள் போடத் துவங்கினர்.அப்போது பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, ''என்ன சொல்ல விரும்புகிறீர்கள். சொல்லுங்கள்,'' என்றார். பின், பாலுவை உற்றுப் பார்த்தபடி, ''நீங்கள் ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா அல்லது வெளியே செல்ல விரும்புகிறீர்களா,'' என்று கேட்டார்.

இதையடுத்து பேசத் துவங்கிய பாலு, ''தமிழக மீனவர்கள் விவகாரம் குறித்து பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியிருந்தார். அதற்கு சாதகமான பதில் வரவில்லை,'' என்றார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், ''இன்று மிகவும் முக்கியமான, பெருமை வாய்ந்த விவாதம் நடைபெற போகிறது. ''ராமர் கோவில் திறப்பு, ராமர் சிலை பிரதிஷ்டை உள்ளிட்டவற்றின் மீது அனைவரும் பேசவுள்ளனர்.''இன்றைக்கு கேள்வி நேரமும் இல்லை. ஜீரோ நேரமும் இல்லை. ஒத்திவைப்பு வைப்பு தீர்மானம் எதையும் எடுத்துக் கொள்ள முடியாது என்பது, மூத்த எம்.பி.,யான உங்களுக்கு தெரியும்தானே,'' என்றார்.

இதை ஏற்றுக் கொள்ள மறுத்த தி.மு.க., - எம்.பி.,க்கள் அமளியில் இறங்கினர். 'காப்பாற்று காப்பாற்று; தமிழக மீனவர்களை காப்பாற்று' என கோஷங்கள் போட்டு விட்டு, ஓரிரு நிமிடங்களில் சபையிலிருந்து வெளிநடப்பு செய்து விட்டனர்.

திடீர் முடிவுக்கு பின்னணி என்ன?


தி.மு.க., - எம்.பி.,க்களின் வெளிநடப்புக்கான பின்னணி குறித்து டில்லி அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: ராமர் கோவில் திறப்பு குறித்த விவாதத்தை நடத்த அரசு திட்டமிட்டு இருந்தது, முதல்நாள் இரவே எம்.பி.,க்களுக்கு தெரிந்து விட்டது. மிகப்பெரிய விவாதம் என்றால், அதில் ஒவ்வொரு கட்சிகளின் எம்.பி.,க்களும் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவிப்பர்.

ஆனால், ராமர் கோவில் திறப்பு விவாதம் என்றதும், தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு அதிர்ச்சியாகி விட்டது. ஆதரித்து பேசினாலும் பிரச்னையாகும்; எதிர்த்துப் பேசினாலும் பிரச்னையாகும் என யோசிக்கத் துவங்கினர்.

விவாதத்தில் பங்கேற்காமல் புறக்கணிப்பதே சரியான வழி என்று முடிவு செய்தனர். புறக்கணித்தாலும் பிரச்னையாகும் என்பதால், பொருத்தமான காரணத்தை ஆய்வு செய்தனர்.வெள்ள நிவாரண நிதி கோரிக்கை என்றால், அது குறித்து பல முறை பேசியாகி விட்டது. காந்தி சிலை முன், 15 நிமிட ஆர்ப்பாட்டம் நடத்தியாகி விட்டது.இப்போதைக்கு கைவசம் உள்ளது மீனவர்கள் விவகாரம்தான். எனவே, அதைக் கிளப்புவோம். எப்படியும் பேச அனுமதி கிடைக்காது. அதையே சாக்காக வைத்து வெளிநடப்பு செய்துவிடுவோம் என முடிவானது.

இந்த திட்டமிடல் குறித்து நேற்று முன்தினம் இரவே எல்லா எம்.பி.,க்களுக்கும் தகவல் தரப்பட்டது.

கூடுதலாக, யாராவது இந்த விஷயம் தெரியாமல் தாமதமாக சபைக்கு போய்விட வேண்டாம். அங்கு போய் பேசி மாட்டிக் கொள்ளவும் வேண்டாம் என்று சபைக்கு எப்போதும் தாமதமாக வரும் எம்.பி.,க்களுக்கு கூடுதல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.இதை அறிந்தவுடன், எப்படியும் காலை 11:10 மணிக்கெல்லாம் சபையை விட்டு வெளியே வந்து விடப்போகிறோம். அதற்கு மேல், டில்லியில் என்ன வேலை நமக்கு என்று திட்டமிட்ட பல எம்.பி.,க்கள், அன்றிரவே சென்னைக்கு நண்பகலுக்குள் கிளம்பும் விமானங்களுக்கு டிக்கெட்டுகளை புக் செய்துவிட்டனர்.

தி.மு.க., - எம்.பி.,க்களின் வழக்கத்துக்கு மாறான அவசரத்தை புரிந்து கொண்டதால் தான், சபாநாயகர் ஓம் பிர்லா, ''பேசுகிறீர்களா அல்லது வெளியே செல்ல திட்டமிட்டுள்ளீர்களா,'' என கேட்டார்.

எல்லாமே திட்டமிட்டபடி நடந்து முடிந்து, சபையை விட்டு வெளியேறியது தான் தாமதம். பெரும்பாலான எம்.பி.,க்கள், பார்லிமென்டிலிருந்து அடுத்த அரைமணி நேரத்திற்குள் நேராக விமான நிலையத்திற்கு விரைந்து சென்னைக்கு புறப்பட்டு விட்டனர்.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. - நமது டில்லி நிருபர் -






      Dinamalar
      Follow us