ஒப்புதல் கேட்டு கோப்பு அனுப்ப வேண்டாம்: நிதித்துறை செயலர் நிதித்துறை செயலர் அறிவுறுத்தல்
ஒப்புதல் கேட்டு கோப்பு அனுப்ப வேண்டாம்: நிதித்துறை செயலர் நிதித்துறை செயலர் அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 31, 2025 03:14 AM
புதுடில்லி:“தாங்களே சொந்தமாக முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ள திட்டங்களை ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டாம், ஒப்புதல் தேவைப்படும் திட்டங்களை மட்டும் அனுப்பினால் போதும்'என, அரசு துறைகளுக்கு, டில்லி அரசின் நிதித்துறை செயலர் பரிஹார் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, டில்லி அரசின் நிதித்துறை சிறப்புச் செயலர் சைலேந்திர சிங் பரிஹார், அரசின் அனைத்து துறைகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
டில்லி அரசின் துறைகளில் அனைத்து திட்டங்களுக்கும் ஒப்புதல் கேட்டு, நிதித்துறைக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. அனைத்து துறைகளுக்குமே சொந்தமாக முடிவெடுக்கும் அதிகாரம் சில திட்டங்களுக்கு உள்ளன.
அதுபோன்ற திட்டங்களுக்கும் ஒப்புதல் கேட்டு, நிதித்துறைக்கு கோப்பு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் நிதித்துறையின் வேலைப்பளு அதிகரிக்கிறது. மேலும், இதர கோப்புகளை ஆய்வு செய்து ஒப்புதல் அளிப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது.
எனவே, சொந்தமாக முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ள திட்டங்களை ஒப்புதலுக்காக நிதித்துறைக்கு அனுப்ப வேண்டாம். நிதித்துறை ஒப்புதல் தேவைப்படும் திட்டங்களின் கோப்புகளை மட்டும் அனுப்பினால் போதும்.
டெண்டர் ஆவணங்களை சரிபார்த்தல், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவற்றையும் நிதித்துறை ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. இதுபோன்றவற்றில் துறை செயலர்களே முடிவு எடுக்க வேண்டும். வழக்கமான செயல்பாட்டு மற்றும் நிர்வாக முன்மொழிவுகளை துறை செயலர்களே ஆய்வு செய்து முடிக்க வேண்டும்.
கோப்புகளை நிதித்துறைக்கு அனுப்புவதற்கு முன், சம்பந்தப்பட்ட துறை செயலர்கள் அதை ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும்.
பொது நிதி விதிகள் 2017, நிதி அதிகாரப் பகிர்வு விதிமுறைப்படி நிதித்துறை ஒப்புதல் தேவைப்படும் கோப்புகளை மட்டுமே அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.