'சுத்தமான குடிநீருக்கே நிதியில்லை; தனி சைக்கிள் பாதை தேவையா?'
'சுத்தமான குடிநீருக்கே நிதியில்லை; தனி சைக்கிள் பாதை தேவையா?'
ADDED : பிப் 11, 2025 02:44 AM

புதுடில்லி l புனே உள்ளிட்ட நகரங்களை போலவே, நாடு முழுதும் குறிப்பிட்ட நகரங்களில் சைக்கிள் செல்ல பிரத்யேக பாதை அமைக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி, தாவிந்தர் சிங் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
உச்ச நீதிமன்றத்திலும் இதுபோன்ற பாதை அமைக்கும்படி மனுவில் அவர் கோரி இருந்தார். இந்த மனு, நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
தனி நபருக்கு எதில் முன்னுரிமை கொடுக்க வேண்டும், எது மிகவும் அத்தியாவசியமான பிரச்னை என்பதை மனுதாரர் புரிந்துகொள்ள வேண்டும். குடிசைப் பகுதிக்குச் சென்று, அங்கு வாழும் மக்களின் நிலைமையை பாருங்கள்.
அவர்களுக்கு சுகாதாரமான குடிநீர், வீடு போன்ற அடிப்படை வசதிகளைக் கூட செய்து தருவதற்கு நிதி இல்லாமல் மாநில அரசுகள் தவிக்கின்றன. அரசு பள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக மூடப்படுகின்றன.
இந்த சூழலில் சைக்கிள் செல்ல தனிப்பாதை கேட்டு பகல் கனவு காண்பதா? தனிநபரின் வாழ்க்கை மற்றும் அடிப்படை சுதந்திரம் பற்றிய அரசியலமைப்பு சட்டத்தின் 21வது பிரிவு பற்றி நாம் கவலைப்பட வேண்டும். மிக அவசரமான தேவைகள் பற்றி மட்டுமே கவலை கொள்ள வேண்டும்.
இவ்வாறு கூறிய நீதிபதிகள், அந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.

