ம.பி.,யில் இருமல் மருந்தை பரிந்துரைத்த டாக்டர் கைது
ம.பி.,யில் இருமல் மருந்தை பரிந்துரைத்த டாக்டர் கைது
ADDED : அக் 05, 2025 11:26 PM

சிந்த்வாரா: மத்திய பிரதேசத்தில், இருமல் மருந்து குடித்து குழந்தைகள் பலியான விவகாரத்தில், அந்த மருந்தை பரிந்துரைத்த டாக்டரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
ம.பி.,யின் சிந்த்வாராவில், கடந்த மாதம் 15ம் தேதி முதல், 1 - 6 வயது வரையிலான குழந்தைகள் சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.
நச்சுப்பொருள் உள்ளூர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட அந்த குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது.
இதற்கிடையே, சிறு நீரக செயலிழப்பு காரணமாக குழந்தைகள் இறந்தது தெரியவந்தது.
அண்டை மாநிலமான ராஜஸ்தானிலும், இதேபோல், இரு குழந்தைகள் உயிரிழந்தன.
இறந்த குழந்தைகளின் சிறுநீரக திசுக்களை சோதனை செய்ததில், 'டைஎத்திலீன் கிளைகால்' நச்சுப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
குழந்தை கள் அருந்திய, 'கோல்ட்ரிப்' மற்றும் 'நெக்ஸ்டரா' இருமல் மருந்துகள் வாயிலாக, இந்த நச்சுப்பொருள் குழந்தைகள் உடலில் பரவியதும் ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து, இது தொடர்பாக, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் அரசுகள் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளன.
இரு மாநிலங்களிலும், 'கோல்ட்ரிப்' மருந்துக்கு த டை விதிக்கப்பட்டுள்ளது . 'நெக்ஸ்டரா' மருந்து தொடர்பாக ஆய்வுகள் வெளிவராத சூழலில், அந்த மருந்தை டாக்டர்கள் பரிந்துரைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் இறந்த பெரும்பாலான குழந்தைகள், பராசியா என்ற இடத்தில் உள்ள டாக்டர் பிரவீன் சோனியின் தனியார் மருத்துவமனையில், ஆரம்பகட்ட சிகிச்சை எடுத்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, 'கோல்ட்ரிப்' மருந்தை பரிந்துரைத்த டாக்டர் பிரவீன் சோனி நேற்று கைது செய்யப்பட்டார்.
கடும் நடவடிக்கை அந்த மருந்தை தயாரித்த தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் உள்ள, 'ஸ்ரீசன்' நிறுவனத்துக்கு எதிராகவும் மத்திய பிரதேச அரசு வழக்கு பதிவு செய்துள்ளது.
இது குறித்து, ம.பி., முதல்வர் மோகன் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முதற்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
'மாவட்ட அளவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தப்ப முடியாது' என, தெரிவித்துள்ளார்.