பயங்கரவாதத்தை ஆதரிக்கிறதா காங்கிரஸ்? விமானி ஸ்மிட் விவகாரத்தில் பா.ஜ., கேள்வி
பயங்கரவாதத்தை ஆதரிக்கிறதா காங்கிரஸ்? விமானி ஸ்மிட் விவகாரத்தில் பா.ஜ., கேள்வி
UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 07:14 PM
புதுடில்லி: ‘நடுவானில் பயணியர் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மிட் மச்சாரின் வீரத்தை காங்கிரஸ் கட்சி பாராட்டாமல் இருப்பது பயங்கரவாதத்தை மவுனமாக ஆதரிப்பதாக உள்ளது’ என, பா.ஜ., கடுமையாக விமர்சித்துள்ளது.
சமீபத்தில், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து இஸ்ரேல் புறப்பட்ட ‘பிளை துபாய்’ விமானத்தை கடத்தி, கீழே மோதி வெடிக்க வைக்க முயன்ற ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானியின் சதித் திட்டத்தை, இந்தியாவை சேர்ந்த விமானி, கேப்டன் ஸ்மிட் மச்சார் முறியடித்தார்.
விமானியர் அறைக்குள் இருவரிடையே நடந்த மோதலில், ஸ்மிட் மச்சார் படுகாயமடைந்தார். எனினும், கடைசி வரை போராடி 174 பயணியர் உயிரை காப்பாற்றினார். அவரது வீரத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நம் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்டோர் பாராட்டினர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர்களும் ஸ்மிட் மச்சாரின் வீரத்தை இதுவரை பாராட்டாமல் இருப்பதற்கு பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி கூறியதாவது:
மஹாத்மா காந்தி வழி நடத்திய காங்கிரசுக்கும், தற்போது உள்ள காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நிறைய இடைவெளி இருக்கிறது. அமைதி, அகிம்சையின் சின்னமான மஹாத்மா காந்தியின் பிறந்தநாளில், உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக இம்ரான் மசூத் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், பிரதமர் மோடியை துண்டு துண்டாக வெட்ட வேண்டும் என வன்முறை வெறியுடன் பேசியவர்.
அதே போல், உ.பி., மாநில தலைவராக ஆராதனா மிஸ்ராவை காங்கிரஸ் நியமித்துள்ளது. இவர் அக்கட்சி தொண்டர்கள் ‘பாரத் மாதா கீ ஜெய்’ என முழக்கமிட்டபோது தடுத்து நிறுத்தியவர். இப்படி வன்முறை எண்ணம் கொண்டவர்களை ஆதரிக்கும் காங்கிரஸ் தலைமைக்கு, பயங்கரவாதத்தை முறியடித்த இந்திய விமானி ஸ்மிட் மச்சாரை பாராட்ட கூட மனம் வரவில்லை.
இதை வைத்து பார்க்கும்போது, காங்கிரஸ் பயங்கரவாதத்திற்கு மவுனமாக ஆதரவு அளிப்பது போல உள்ளது. பாட்லா ஹவுஸ் ‘என்கவுன்ட்டர்’ சம்பவத்தில், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்காக கண்ணீர் விட்ட காங்., பார்லி குழுத் தலைவர் சோனியாவுக்கு, ஸ்மிட் மீது துளி கருணை கூட வரவில்லை.
பாலஸ்தீன ஆதரவு பையை துாக்கி திரிந்த ‘இளவரசி’ பிரியங்காவுக்கு, ஸ்மிட்டின் வீரத்துக்காக அனுதாபத்தின் ஒரு கைக்குட்டையை கூட வெளிப்படுத்த முடியவில்லை. காசா விவகாரத்தில் மிகுந்த கவலைப்பட்ட ‘வயநாடு இளவரசர்’ ராகுல், விமானி மச்சாரை பாராட்டினால் எங்கே ஓட்டு வங்கி பறிபோய்விடுமோ என அச்சப்படுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
