சுப்ரீம் கோர்ட் வளாகத்திலும் நாய் தொல்லை: நீதிபதிகள் புது உத்தரவு
சுப்ரீம் கோர்ட் வளாகத்திலும் நாய் தொல்லை: நீதிபதிகள் புது உத்தரவு
ADDED : ஆக 13, 2025 01:41 AM

புதுடில்லி: 'உணவுக்காக நாய்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைவதைத் தடுக்க, மிச்சமான உணவுகளை மூடிய குப்பைத் தொட்டிகளில் மட்டுமே கொட்ட வேண்டும்' என, அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நடவடிக்கை நாய்க்கடி சம்பவங்கள் தொடர்பாக, நாடு முழுதும் முதியோர்கள், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ரேபிஸ் நோய் தாக்கியும் பலர் உயிரிழந்துள்ளனர்.
உச்ச நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளேயும் தெருநாய்கள் சுற்றித் திரிவதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். உணவுக்காக நாய்கள் நுழைவதை தடுக்க, உடனடியாக அமல்படுத்தும்படி மேலும் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
அதன்படி, உயர் நீதிமன்ற வளாகம் முழுதும் மூடிய குப்பைத் தொட்டிகளை வைத்து, அதில் மட்டுமே மிச்சமான உணவுகளை கொட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்த சூழ்நிலையிலும் திறந்தவெளியிலோ, மூடப்படாத குப்பைத் தொட்டிகளிலோ உணவை கொட்டக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ராகுல் கண்டனம்! டில்லியில் அனைத்து தெருநாய்களையும் அகற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
வாயில்லா ஜீவன்கள் மீதான இந்த நடவடிக்கை கொடூரமானது, இரக்கமற்ற து. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மனிதாபிமான, அறிவியல்பூர்வமாக பின்பற்றப்பட்டு வந்த பல ஆண்டு கொள்கையிலிருந்து பின்வாங்குவதாகும்.
தெருநாய்கள் அழிக்கப்பட வேண்டிய பிரச்னை அல்ல. தங்குமிடங்கள், கருத்தடை, தடுப்பூசி மற்றும் சமூக பராமரிப்பு போன்றவற்றால், நாய்களை கொடுமைப்படுத்தாமல் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.