ADDED : டிச 29, 2024 01:35 AM

புதுடில்லி, மத்திய அரசின் பி.எம்., கேர்ஸ் எனப்படும் பிரதமரின் பொது மக்கள் உதவி மற்றும் அவசரகால நிலைக்கான நிதி தொகுப்புக்கு, கடந்த 2022 - 23 நிதியாண்டில் 912 கோடி ரூபாய் மட்டுமே நன்கொடை வந்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று பரவத் துவங்கிய, கடந்த 2020 மார்ச்சில் பி.எம்., கேர்ஸ் நிதி உருவாக்கப்பட்டது. இந்த நிதிக்கு தரப்படும் நன்கொடை தொகை மற்றும் இருப்பு ஆகியவற்றின் அறிக்கை, ஆண்டுதோறும் அதன் இணையதளத்தில் பதிவேற்றப்படும்.
அந்த வகையில், 2022 - 23 நிதியாண்டுக்கான தகவல்கள் இணையதளத்தில் உள்ளன. அதன்படி, 2022 - 23ல் பி.எம்., கேர்ஸில் உள்ள மொத்த இருப்பு 6,283 கோடி ரூபாய். இந்த ஆண்டில் 912 கோடி ரூபாய் நன்கொடை சேர்ந்துள்ளது. கொரோனாவால் தாய், தந்தையரை இழந்த குழந்தைகளுக்காக, 346 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
பி.எம்., கேர்ஸ் நிதி துவங்கப்பட்ட 2020 -- 21 நிதியாண்டில் மிக அதிகபட்சமாக 7,184 கோடி ரூபாயும், 2021 - 22ல் 1,938 கோடி ரூபாயும் நன்கொடை குவிந்தது. தற்போது அது 912 கோடி ரூபாயாக சுருங்கியுள்ளது.
இந்த நன்கொடையில், வெளிநாட்டில் இருந்து பங்களிப்பு வழங்குவோரும் உள்ளனர். அந்த தொகையும், 2020 --- 21ல் 495 கோடி ரூபாயாக இருந்தது; தற்போது 2.57 கோடி ரூபாயாக சரிந்துள்ளது.